×

ஜோசியர் வீட்டில் இருந்து மான் தோல், புலி பற்கள் யானை தந்தம் பறிமுதல்: வனத்துறை நடவடிக்கை

சென்னை, அக்.29: மடிப்பாக்கத்தில் உள்ள ஜோசியர் வீட்டில் இருந்து மான்தோல், புலிப்பல், யானை தந்தம் உள்ளிட்டவற்றை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மடிப்பாக்கம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (72). ஜோசியரான இவர், ஜோசியம் பார்ப்பதுடன், பல ஆண்டுகளாக பூஜை பொருட்கள் வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில் ஜோசியர் நடராஜன், பூஜைக்காக வருபவர்களிடம் வியாபரம் பெருகவும், பணம் செழிக்கவும், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், தோஷம் கழிக்கவும், பரிகாரத்திற்கும் மான் தோல், மான் கொம்பு, புலிப்பல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதாக வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, ஜோசியர் நடராஜன் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூஜை பொருட்களின் இடையில், மான்தோல், மான் கொம்பு, புலிப்பல், புலி நகம் உள்ளிட்டவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 மான்தோல், மான் கொம்புகள், 10 புலிப்பற்கள், 2 சிறிய யானை தந்தம், யானை முடி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதிகாரிகள், நடராஜன் மீது வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972ல் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜோசியர் வீட்டில் இருந்து மான் தோல், புலி பற்கள் யானை தந்தம் பறிமுதல்: வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Josier ,department ,Chennai ,Forest department ,Madipakkam ,
× RELATED கோடை காலங்களில் மனிதர்களை போல...