×

திருப்போரூரில் குப்பை அள்ளுவதில் எல்லை பிரச்னை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியையொபட்டி தண்டலம் ஊராட்சி உள்ளது. இந்த 2 ஊர்களும் அருகருகே அமைந்தாலும் தண்டலம் கிராமத்தில் வசிக்கும் பலர் தங்களது முகவரியை திருப்போரூர் என்றே குறிப்பிடுகின்றனர். திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலை பள்ளி, மின் வாரிய அலுவலகம் போன்றவை திருப்போரூர் மற்றும் தண்டலம் ஆகிய 2 கிராம எல்லைகளில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் சேரும் குப்பைகளை அகற்றுவதில் நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.

குறிப்பாக, செங்கல்பட்டு சாலையில் இருந்து தண்டலம் செல்லும் பிரதான சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. வட்டாட்சியர் அலுவலக மதில்சுவரை ஒட்டி வசிக்கும் பலர், தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரும் குப்பைகளை இங்கு வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தின் மதில்சுவர் அருகே குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. குப்பை கிடக்கும் இடம் திருப்போரூர் பேரூராட்சி எல்லை என கூறி தண்டலம் ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற மறுக்கிறது.

பேரூராட்சி நிர்வாகத்தின் எல்லையில் இருந்தாலும் தண்டலம் ஊராட்சியில் சேரும் குப்பை இங்கு கொட்டப்படுவதால் தங்களால் அகற்ற முடியாது என பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மறுக்கின்றனர். அதிகளவில் குப்பை தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மாலதி இளங்கோவன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பேரூராட்சி ஊழியர்கள் சில நேரங்களில் மட்டும் குப்பையை அகற்றுகின்றனர். இரு கிராம நிர்வாக எல்லையில் இப்பகுதி அமைந்துள்ளதால் உடனுக்குடன் குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post திருப்போரூரில் குப்பை அள்ளுவதில் எல்லை பிரச்னை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Tiruporur ,Thandalam ,Panchayat ,Municipality ,Dinakaran ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு