×

இந்த வார விசேஷங்கள்

அன்னாபிஷேகம் 28.10.2023- சனி

இன்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. இந்த நாளில் சிவபெருமானைத் தரிசிக்க, அன்னதோஷமும் அன்ன துவேஷமும் நீங்கும்.

அன்னதோஷம் யாரைப் பாதிக்கும்?

பசியால் வாடுபவர்களுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும், பிறரைச் சாப்பிட விடாமல் தடுப்பவர்களையும், ஆடு, மாடுகள், பறவைகள் போன்ற உயிரினங்கள் சாப்பிடும் போது விரட்டி அடிப்பவர்களையும் அன்னதோஷம் பீடிக்கும். பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவமாகும். தான் உண்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும் அன்னதோஷம் பாதிக்கும். பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களையும் அன்னதோஷம் பீடிக்கும்.

அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. உணவு இருந்தாலும் ஒரு வாய் கூட ஒழுங்காக சாப்பிட முடியாது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். இதற்கு அன்னபூரணி விரதம் இருந்து அன்னதானம் செய்ய வேண்டும்.

ஐப்பசி பௌர்ணமி தினத்தில் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானைத் தரிசனம் செய்வது நன்மை ஏற்படும்.ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்ன பூரணியான பார்வதியை வணங்க காரக கிரகமும் சந்திரனே.அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பதும், சந்திரனின் காரகம் பெற்ற அரிசி வாங்கி கோயிலில் கொடுப்பதும் அன்ன தோஷ நிவர்த்திக்கு வழியாகும்.

சந்திர கிரகணம் 28.10.2023- சனி

அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி, 29ஆம் தேதி அதிகாலை வரை, நம்முடைய பாரத தேசத்தில் தெரியும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இருக்கும்போது, ​​சந்திர கிர கணத்தை சந்திரனின் மேற்பரப்பில் நிழலிடச் செய்கிறது. பௌர்ணமியின் போது மட்டுமே வானில் நிகழும் ஒரு சுவாரசியமான காட்சியாகும். சந்திர கிரஹணம் தென்மேற்கு வானில் தெரியும். அதிகபட்ச கிரகணத்தின் போது, ​​சந்திரன் அடிவானத்திலிருந்து 62°
உயரத்தில் இருக்கும்.

இந்தியாவில், அதிகபட்ச கிரகணம் அதிகாலை 1:45 மணிக்கு நிகழும், அப்போது சந்திர வட்டின் 12% நிழலில் இருக்கும். இந்த சந்திர கிரகணமானது, ராகு கிரஸ்தம் என்று வழங்கப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சுக்ல பட்ஷ பௌர்ணமி திதியில், அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் நடக்கிறது. அசுவினி, பரணி, மகம், மூலம், ரேவதி முதலிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பஸ்திரீகள் கிரகண காலத்தில் சந்திரனை பார்க்கக் கூடாது. நள்ளிரவு 1.03 மணிக்கு ஏற்படும் சந்திர கிரகணம் 2 மணி 23 நிமிடங்களுக்கு முடிகிறது.

திருமூல நாயனாரின் குருபூஜை 28.10.2023 – சனி

திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயனார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் அருளிச்செய்த நூல் திருமந்திர மாலையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்..”என்று திருமந்திரத்தில் அழகாக விளக்கியுள்ளார். திரு மந்திரம் ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் துறைகளைக்கொண்டது.

இவரை “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் போற்றியுள்ளார். மூலன் என்ற இடையர் உடலில் புகுந்து, திருமந்திரம் பாடிய திருமூல நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான மயிலாடுதுறை மாவட்டம் சாத்தனூரில் (மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது) உள்ள திருமூல நாயனார் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன மயிலாடுதுறை மாவட்டத்தின் திருவா வடுதுறையில் உள்ள அ/மி கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈஸ்வரர்) திருக்கோயிலில் (மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத் தலமிது. திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது. இந்தக்கோவில் பிராகாரத்தில் திருமூல (இடைய) நாயனாரின் சந்நதி இருக்கிறது. இவரது குரு பூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

நெடுமாறனார் குருபூஜை 29.10.2023 – ஞாயிறு

தடுமாறு நெறியதனைத் தவமென்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும் மண்வலையி லகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால்.

தடுமாற்றத்தை விளைக்கும் புரை நெறியினையே தவமென்று கொண்டு, தமது உடலை வருத்துகின்ற செயல்களைச் செய்து தீநெறி ஒழுகும் அமணரது சூழ்ச்சியினுள் அகப்பட்டு, அவ்வலையினின்றும் விடுபடும்படி தமிழ்விரகராகிய ஆளுடைய பிள்ளையாரது, (ஞான சம்பந்தர்) வினைமாற்றிப் பிறவியறுக்கும் திருவடிகளை அடைந்த நெடுமாறனாரது பெருமையானது ஏழு உலகங்களிலும் நிறைந்து விளங்கியது; என்று இவர் பெருமையை மேற்படி பாடல் கூறுகிறது. நெடுமாறனார் பாண்டிநாட்டை ஆண்ட போது, வடநாட்டு மன்னர்கள், பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால், ‘நெல்வேலிவென்ற நெடுமாறன்’ எனப் பெயர் பெற்றார்.

இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். ஆளுடைப் பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார். நெடுமாறன் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு, திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபதமடைந்து இன்புற்றிருந்தார். நின்றசீர் நெடுமாற நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சிதம்பரம் தேவாதிதேவன் டோலோற்சவம் 30.10.2023-திங்கள்

டோலோற்சவம் என்பது ஊஞ்சல் உற்சவம். பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் மிகவும் இனிமையானது. ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களிலும் டோலோற்சவம் செய்ய வேண்டும். பல திருத்தலங்களிலும் ஐப்பசி மாதத்தில் டோலோற்சவம் நடத்தப்படுகிறது. சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளுக்கு இன்றிலிருந்து பத்து நாட்கள் டோலோற்சவம் மிகச் சிறப்பாக நடத்தப்படும். மாலை வேளையில் பெருமாளை சர்வ அலங்காரங்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்வார்கள். புஷ்ப அலங்காரங்கள் வெகு அற்புதமாக இருக்கும். அந்த ஊஞ்சலின் நான்கு சங்கிலிகள் நான்கு வேதங்களாகக் கருதப்படும்.

வேத மந்திரங்களால் ஹோமம் நடத்தப்படும். பிரபந்த இன்னிசை யோடும், பிரத்தியேக ஊஞ்சல் பாடல்களுடனும் மேளதாளங்களோடும் அந்த ஊஞ்சலை மெல்ல ஆட்டுவார்கள். பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். யார் ஒருவர் இந்த டோலோற்சவத்தை ஏற்பாடு செய்கிறார்களோ, அவர்களின் பாவங்கள் எல்லாம் தீரும். அவர்களின் 21 தலைமுறையினர் புண்ணியம் அடைவார்கள். அதைப் போல கோயிலுக்குச் சென்று டோலோற்சவம் சேவிப்பவர்கள் பல புண்ணியநதிகளில் நீராடிய பலனையும், பற்பல யாகங்களைச் செய்த பலனையும் அடைவார்கள்.

இடங்கழிநாயனார் குருபூஜை 30.10.2023 – திங்கள்

கோனாட்டுக் கொடும்பாளூ ரிருக்கும் வேளிர்
குலத்தலைவ ரிடங்கழியார் கொங்கிற் செம்பொ
னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்த்த
வாதித்தன் மரபோர் நெற் கவர்ந்தோ ரன்பர்
போநாப்ப ணிருளின்கட் காவ லாளர்
புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு
மானேற்று ரடியாரே கொள்க வென்று
வழங்கியர சாண்டருளின் மன்னினாரே.

கொடும்பாளுர் என்னும் ஊரிலே, குறுநிலமன்னர் குலத்திலே, சிதம்பரம் கோயிலுக்கு செம்பொன் வேய்ந்த சோழன் குடியிலே, அவதரித்தவர் இடங்கழிநாயனார். சைவநெறியும் வைதிக நெறியும் தழைக்க, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்கள் சிவாகம விதிப்படி நடக்கச் செய்தார். சிவனடியார்களைத் திருவமுதுசெய்விக்கும் ஓரடியவர் ஒருநாள் திருவமுதுசெய்வித்தற்குப் பொருள் எங்கும் அகப்படாமையால் மனந்தளர்ந்து, மாகேசுரபூசைமேல் வைத்த ஆசையினால் எப்படியாவது பொருள் வேண்டுமே என்று, இடங்கழி நாயனாருடைய பண்டாரத்திலே இருந்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முயன்றார்.

காவலாளர்கள் அதைக் கண்டு, அவரைப் பிடித்து இடங்கழிநாயனாருக்கு முன்கொண்டு வந்தார்கள். இடங்கழி நாயனார் அவ்வடியவரைப் பார்த்து, ‘‘நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்?’’ என்று கேட்டார். அவ்வடியவர் ‘‘நான் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருள் இன்மையால் இப்படிச் செய்தேன். எனக்காக எடுக்கவில்லை’’ என்றார். இடங்கழிநாயனார் அது கேட்டு மிக இரங்கி மகிழ்ந்தார். ‘‘எனக்கு இவரன்றோ பண்டாரம்’’ என்று சொல்லி, ‘‘சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க’’ என்று எங்கும் பறையறிவித்தார். பின்னும் நெடுங்காலம் திரு நீற்றின் நெறி தழைக்கும்படி அரசாண்டு சிவபதத்தை அடைந்தார். அவர் குருபூஜை இன்று. (ஐப்பசி கார்த்திகை)

சங்கடஹர சதுர்த்தி 1.11.2023-புதன்

இன்று சங்கடஹர சதுர்த்தி. சங்கடங்களை எல்லாம் போக்கும் இன்றைய சதுர்த்தி, சந்திரனுக்குரிய ரோகிணி நட்சத்திரத்தில், சந்திரன் உச்சமாக இருக்கும் புதன்கிழமை வருகிறது என்பது விசேஷம். காலை விநாயகருக்கு விளக்கேற்றி, அறுகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்துபூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Annabhishekam ,Shiva ,Aippasi Poornami ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...