×

மீண்டும் ஆட்சி அமைத்தால் ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: மாணவர்களுக்கு இலவச லேப்டாப், டேப்லெட்

* அசோக் கெலாட்டின் 5 வாக்குறுதிகள்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் 95 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இதுவரை அறிவித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜவும் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இந்நிலையில் ஜெய்பூரில் காங்கிரஸ் தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது, “ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும், பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும், கோ தன் திட்டத்தின்கீழ் 1 கிலோ மாட்டு சாணம் ரூ.2க்கு கொள்முதல் செய்யப்படும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்” என்ற 5 வாக்குறுதிகளை வழங்கினார்.

* பாஜ மீது குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அசோக் கெலாட், “அமலாக்கத்துறையை பாஜ அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் சொன்னது போல் நாட்டில் நாய்களை விட அமலாக்கத்துறை தான் அதிகம் உலவுகிறது என்பது உண்மைதான். இதை மிகுந்த மனவேதனையுடன் கூறுகிறோம். நாட்டின் புலனாய்வு அமைப்புகள் அரசின் ஆயுதங்களாகி விட்டன” என்று குற்றம்சாட்டினார்.

The post மீண்டும் ஆட்சி அமைத்தால் ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: மாணவர்களுக்கு இலவச லேப்டாப், டேப்லெட் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Ashok Khelat ,Jaipur ,Congress ,
× RELATED உள்ளாடைகளை கழற்றி சிறுமியை...