×

சின்னா பின்னமாகும் காசா… தரைவழி தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்

ஜெருசலேம்: ஹமாஸ் படையினரின் ஆதிக்கம் நிறைந்த காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தரைவழி தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு இஸ்ரேல் பகுதி மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த போர் தற்போது 3வது வாரமாக நீடிக்கிறது.

நேற்று முன்தினம் முதல் முறையாக காசா நகருக்குள் பீரங்கி படைகளுடன் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், அதன் தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதே நேரம், காசா பகுதி முழுவதும் 250க்கும் மேற்பட்ட வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதிகளில் இருந்த பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. தெருக்கள், சாலைகள் முழுவதும் கட்டிட இடிபாடுகளின் குவியல்களாக காட்சி அளிக்கின்றன. தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் உறவுகளை பலி கொடுத்த உறவினர்களின் அழுகுரல் ஓலங்கள் கேட்டன.

இதனிடையே, மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில், உள்ளவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தளபதி உள்பட 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரபா எல்லையில் காசாவுக்கும் எகிப்துக்கும் இடையே உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த 150க்கும் மேற்பட்ட டிரக்குகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் காசாவில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஹமாஸ் படைகளுக்கு ஆதரவளிக்கும் எகிப்து, சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேல் ராணுவம் எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பத்தில் உள்ள ரெட் சிட்டியின் தபா பகுதியில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. காசா மீதான தரைவழி தாக்குதலை மேலும் தீவிரமாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* போரை நிறுத்த மறுப்பு

ஐ.நா. அவசரக் கூட்டத்தில், போரை நிறுத்த கோரும் அரபு நாட்டு தீர்மானத்தின் மீது பேசிய பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், “குண்டுமழை பொழிவதை நிறுத்துங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், “போர் நிறுத்தம் ஹமாஸ் படையினர் ஆயுதங்களை சேகரித்து தயாராக வழங்கப்படும் அவகாசமாகி விடும். பின்னர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள்,” என்று போர் நிறுத்தத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

* நிதி உதவிக்கு தடை

அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸ் படையினரின் போருக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதை தடை செய்யும் வகையில், தீவிரவாத ஒழிப்பு தடையை அமல்படுத்துவதன் மூலம், உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து நிதி பெறுவது தடுக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

The post சின்னா பின்னமாகும் காசா… தரைவழி தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Shinna ,Israel ,JERUSALEM ,Gaza Strip ,Hamas ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்