×

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நீளம் தாண்டுதலில் தூத்துக்குடி ராணுவ வீரருக்கு தங்கம்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.குமராபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.குமராபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் சோலைராஜ்(29). சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதனால் படிப்பை நிறுத்திவிட்டு 2013ல் ராணுவத்தில் சேர்ந்தார். 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியில் இருந்தபோது சோலைராஜின் வலது காலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது கால் பாதம் பகுதி ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. தொடர்ந்து மனம் தளராது ராணுவத்தில் பணியாற்றிய சோலைராஜ், நீளம் தாண்டுதல் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி-64 போட்டியில் சோலைராஜ் கலந்து கொண்டு 6.80 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

இது இந்தியாவிற்கு 25வது தங்கப்பதக்கமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த ராணுவ வீரர் சோலைராஜிக்கு ஏ.குமராபுரம் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தங்க பதக்கம் வென்ற சோலைராஜிக்கு முத்துபிரியா என்ற மனைவியும், தட்சிகா என்ற குழந்தையும் உள்ளனர்.

The post பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நீளம் தாண்டுதலில் தூத்துக்குடி ராணுவ வீரருக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Para Asian Games ,Vlathikulam ,A. Kumarapuram ,Asian Para Games ,Dinakaran ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...