×

பாசி நிதி நிறுவன மோசடியில் லஞ்சம் பெற்ற வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஐஜி சரண்: நவ. 4ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு

கோவை: பாசி நிதி நிறுவன மோசடியில் லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஐஜி பிரமோத் குமார் சரணடைந்தார். மீண்டும் வரும் நவம்பர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் அதிக வட்டி அளிப்பதாக கூறி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் பணம் 58 ஆயிரத்து 500 பேரிடம் ரூ.930.71 கோடி வசூலித்து மோசடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு தலா 27 ஆண்டு சிறை மற்றும் ரூ.171 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரித்தபோது, தன்னை கடத்தி 3 கோடி ரூபாய் பறித்ததாக கமலவள்ளி வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரித்த சிபிஐ அப்போதைய மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் மற்றும் திருப்பூர் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா மற்றும் ஜான்பிரபாகர் மீது தனி வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டவர்களில் பிரமோத்குமார் தவிர மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் காலஅவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக தற்போது பணியாற்றி வரும் ஐஜி பிரோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜிக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில் நேற்று காலை ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமார் சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிடிவாரண்டை தள்ளுபடி செய்தார். வழக்கில் இருந்து பிரமோத்குமாரை விடுவிக்க கோரிய மனு மீது வரும் 31ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

நவம்பர் 4ம் தேதி பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், திருநெல்வேலியை சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டு நீதிபதி கோவிந்தராஜன் வழக்கை ஒத்திவைத்தார்.

The post பாசி நிதி நிறுவன மோசடியில் லஞ்சம் பெற்ற வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஐஜி சரண்: நவ. 4ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IG Charan ,Coimbatore ,CBI court ,Basi ,Pramod Kumar Surrenders ,Basi Financial ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்