×

உலகளாவிய போட்டியை சமாளிக்க திறமைகளை பயன்படுத்த வேண்டும்: இந்திய கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

சென்னை: சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலை வகித்து பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:

தமிழ்நாடு கடல்சார் தொழிலாளர்களின் மாநிலமாக உள்ளது. தெற்காசிய நாடுகளுக்கும் தென்னிந்தியாவுக்கும் கலாச்சார உறவுகள் அதிகம் இந்த கடல் வழியாகத்தான் சென்று சேர்ந்துள்ளது. இந்திய வர்த்தகத்தின் 65 சதவீத வர்த்தகம் கடல் போக்கு வரத்து மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 2 லட்சத்து 50 ஆயிரம் மீன்பிடி படகுகளை கொண்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உலக நாடுகளிடம் உள்ள போட்டியை சமாளிக்க கப்பல் தொழிலில் நாம் சிறந்து விளங்க வேண்டும். நமது அனைத்து திறமைகளையும் இதில் பயன்படுத்த வேண்டும். வணிகம் மற்றும் பயணிகள் கப்பல் கட்டும் தொழில், அவற்றை இயக்கும் திறன், போட்டித் திறன் ஆகியவற்றில் நாம் உயர்ந்த தரத்தை அடைய வேண்டும்.

நீங்கள் பெறும் பட்டப்படிப்பு, உங்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் உயர்ந்த பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்க வேண்டும். ஒரு வர்த்தக கடற்படை அதிகாரியாக பல மாதங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது மற்றும் மற்ற பணியாளர்களுடன் இணக்கமாக வாழ்வது போன்றவற்றை சமாளிக்க திறன்பெற வேண்டும். வாழ்க்கைப் பாதையில் வீசும் புயல்களை எதிர்கொள்ளும் வலிமை உங்களுக்கு இருக்கட்டும். படித்த இடத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கட்டும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

* பத்து பேருக்கு தங்கப்பதக்கம்

இந்தியன் கடல்சார் பல்கலைக் கழகத்தின் 6 சீர்மிகு பள்ளிகளை சேர்ந்தவர்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளை சேர்ந்தவர்கள் 1944 பேர் நேற்று பட்டம் பெற்றனர். அவர்களில் நேரடியாக நேற்று பட்டம் பெற்றவர்கள் 245 பேர். கடல்மைல் படிப்பு பிரிவில் 1062, கடல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 630, கடற்படை தள வடவமைப்பு மற்றும் கடல் பொறியியல் பிரிவில் 52, கடல் மேலாண்மை பிரிவில் 197 பேர் அடங்குவர். மேற்கண்ட பிரிவுகளின் கீழ் படித்து பட்டம் பெற்றவர்களில் தங்கப்பதக்கம் பெற்ற 10 பேருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

The post உலகளாவிய போட்டியை சமாளிக்க திறமைகளை பயன்படுத்த வேண்டும்: இந்திய கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு appeared first on Dinakaran.

Tags : President ,Draupathi Murmu ,Indian Maritime University ,Chennai ,convocation ,Semmancheri ,Dravupati Murmu ,Indian ,Maritime University ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!