×

கடந்த 9 ஆண்டுகளில் அதானி குடும்பத்தை மட்டும்தான் வாழ வைத்துள்ளார் மோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

நெல்லை: கடந்த 9 ஆண்டுகளில் அதானி குடும்பத்தை மட்டும்தான் பிரதமர் மோடி வாழ வைத்துள்ளார் என்று திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நெல்லை மத்திய, கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் பாளை கேடிசி நகர் மைதானத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டசபையில் நீட் விலக்கு தீர்மானம் கொண்டு வந்த போது, 230 எம்எல்ஏக்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று வாக்களித்தனர். பா.ஜ. வின் 4 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இது மக்கள் பிரச்னை. கடந்த 6 ஆண்டுகளில் அரியலூர் அனிதாவில் தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீசன் வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் வாங்கியவர் அனிதா. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், மருத்துவர் அனிதா என அழைக்கப்பட்டிருப்பார். திமுக ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. அடிமை அதிமுக ஆட்சியில் தான் ஒன்றிய பா.ஜ. அரசு கொடுத்த அழுத்தத்தால், நீட் தேர்வை தமிழகத்தில் நுழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 50 நாட்களில் 50 லட்சம் பேரிடமும் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னதையும், சொல்லாததையும் செய்துள்ளார். ஆனால் ஒன்றிய அரசின் பிரதமர் மோடி கருப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். கடந்த 9 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தைத் தான் வாழ வைத்துள்ளார். அதானி குடும்பம் தான் அது. இன்று உலகத்தின் 2வது பணக்காரர் என்ற இடத்திற்கு அதானி உயர்ந்திருக்கிறார். அனைத்து அரசுத் துறைகளும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. ஏர்போர்ட், ரயில்வே, துறைமுகம் என ஒரு கார்ப்பரேட் நிறுவனம், 9 ஆண்டுகளில் எப்படி வளர்ந்தது? என ஹின்டன்பர்க் நிறுவனம் கூறியது குறித்து, ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு அலுவலகம் கடந்த 9 ஆண்டு கால ஒன்றிய பா.ஜ. ஆட்சியில் ரூபாய் ஏழரை லட்சம் கோடிக்கு எந்தக் கணக்கும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. துவாரக்மாலா என்ற திட்டத்தின் கீழ் ஒரு கி.மீ., தூரம் சாலை அமைத்ததற்கு ரூ.250 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் என்பது மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ரமணா என்ற சினிமா படத்தில் நோயாளி இறந்த பிறகு அவருக்கு ஆபரேஷன் செய்வதற்காக மருந்து, மாத்திரைகள் கேட்பார்கள். அந்தத் திரைப்படத்தில் நான் பார்த்தது, தற்போது நிஜக் காட்சியாகியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் கேள்வி எழுப்பினால் ஒன்றிய அரசு வாய் திறப்பதில்லை. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post கடந்த 9 ஆண்டுகளில் அதானி குடும்பத்தை மட்டும்தான் வாழ வைத்துள்ளார் மோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Adani ,Minister Assistant Minister ,Stalin Katam ,Nella ,Dimuka Youth Secretary ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்