×

சிதிலமடைந்த நிலையிலுள்ள திருக்கோயில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (26.10.2023) சென்னை இணை ஆணையர் மண்டலம் 1 -ல் சிதிலமடைந்த நிலையிலுள்ள திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் சென்னை, சூளை, அருள்மிகு வெங்கடாஜலபதி பரிபாலன சபா, அருள்மிகு லட்சுமி அம்மன் திருக்கோயில், அருள்மிகு தர்மராஜா திருக்கோயில், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், அருள்மிகு திரெளபதி அம்மன் தர்மராஜா திருக்கோயில், அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோயில், அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் கள ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைத்து குடமுழுக்குகளை நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல், வருவாய் இனங்களை பெருக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது தொடர்பாக அவ்வபோது கள ஆய்வு மேற்கொண்டு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், சென்னை மண்டல இணை ஆணையர் 1 -ல் சிதிலமடைந்த நிலையிலுள்ள 25 திருக்கோயில்கள் பட்டியலிடப்பட்டு அதில் முதற்கட்டமாக 7 திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, சூளை பகுதியைச் சேர்ந்த 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களான அருள்மிகு வெங்கடாஜலபதி பரிபாலன சபா, அருள்மிகு லட்சுமி அம்மன் திருக்கோயில், அருள்மிகு தர்மராஜா திருக்கோயில், அருள்மிகு திரெளபதி அம்மன் தர்மராஜா திருக்கோயில், அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோயில், அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைப்பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், திருக்கோயிலின் மேற்கூரை மற்றும் சுவர்கள் ஆலமர விழுதுகளால் சிதிலடைந்தள்ளதாலும் மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிதிலமடைந்த திருக்கோயில்களை புனரமைத்திட திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், சூளை, அருள்மிகு அருள்மிகு லட்சுமி அம்மன் திருக்கோயில் சுற்றுச்சுவருக்கு உள்ளே பூங்கா நகர், அருள்மிகு சென்னமல்லீஸ்வரர் திருக்கோயிலின் அடிமனைதாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் இருப்புப் பட்டறைகள், அருள்மிகு திரெளபதி அம்மன் தர்மராஜா திருக்கோயில் சுற்றுச்சுவருக்கு உட்புறம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள 10 கடைகள், அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோயிலின் சுற்றுச்சுவருக்கு முன்புறம் திருக்கோயில் மற்றும் அதற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள 2 கடைகள் ஆகியவற்றை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், அருள்மிகு தர்மராஜா திருக்கோயிலுக்கு எதிரே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுவாதீனம் பெறப்பட்ட கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துகுமாரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தினை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, சென்னை மாவட்டக் குழு தலைவர் கே.எஸ். ரவிச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வேலு திருக்கோயில்களின் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சிதிலமடைந்த நிலையிலுள்ள திருக்கோயில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Hindu Religious Endowments ,B.K. Shekharbabu ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...