×

தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்கா, இது கலவர பூமியாக ஒருபோதும் மாறாது: கி.வீரமணி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்கா, இது கலவர பூமியாக ஒருபோதும் மாறாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னையில் ஆளுநர் மாளிகைமுன் ரவுடி பட்டியலில் இருக்கும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசிய செய்திபற்றியும், அதற்குமேல் காவல்துறை மேற்கொண்ட உடனடி நடவடிக்கைபற்றியும் சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விளக்கிக் கூறி, புலன் விசாரணை தொடருவதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் இன்று (27.10.2023) செய்தியாளர்கள் சந்திப்பில், நடைபெற்ற நிகழ்வு குறித்து காணொலி காட்சியையும் வெளியிட்டு மக்களுக்கு விளக்கியுள்ளனர்.

மயிலாடுதுறையில், ஆளுநர் தாக்கப்பட்டார் என்று பொய்யைப் பரப்புவதையும் தக்க சான்றுகளோடு அம்பலப்படுத்தியுள்ளனர். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அத்துணை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்துள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. அதோடு அதுபற்றி ராஜ்பவன் வட்டாரங்கள் பரப்பும் தவறான செய்திகளை மறுத்தும், நடந்ததை விரிவாக விளக்கியும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர்ஜிவால் அவர்கள் விரிவான, விளக்கமான அறிக்கை ஒன்றையும் நேற்று (26.10.2023) வெளியிட்டுள்ளார். எப்படி இருந்தாலும் இந்த நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியதே. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நாளும் செயல்படும் ஆளுநர்!

தேர்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒவ்வொரு நாளும் பகிரங்கமாகவே பேசியும், கோப்புகளை கிடப்பில் போட்டும், நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் நடப்பது போன்ற ஆளுநரின் அடாவடித்தனத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அத்துணைக் கட்சிகளும், நபர்களும் கருத்தியல் ரீதியாகக் கண்டித்து வந்தாலும், எவரும் வன்முறையை அவருக்கோ அல்லது எவருக்கோ எதிராகத் தூண்டி விடுவதோ, வன்முறை நடப்பதை ஆதரிப்பதோ தமிழ்நாட்டுப் பண்பாக ஒருபோதும் இருந்ததில்லை. கைது செய்யப்பட்ட அந்த நபர், முந்தைய கைதுகள் என்னென்ன? அவர் யாரால் பிணையில் எடுக்கப்பட்டார்? எப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்? என்ற தகவல்களும் சமூக வலைதளத்தில் வருகின்றன. வேறு சரக்கு இல்லாமல் அரசியல் செய்வதா?

உடனடியாக இதனை வைத்து அரசியல் செய்ய – வேறு உருப்படியானவை கிடைக்காததால், ‘‘தி.மு.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கெட்டு விட்டது’’ என்று போலி ஒப்பாரி, பொய் அழுகை செய்து ‘‘ஆளுநருக்கு எதிராகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள்’’ என்று மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல இணைத்து ‘அரசியல்’ செய்யலாமா என்ற திட்டமும் அங்கே உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது. ‘‘உண்மைக்கு எப்போதும் ஒருமுகம்தான் உண்டு. பொய்மைக்கோ பல முகங்கள், பல நிறங்கள் உண்டு’’ என்பது உலகறிந்த உண்மையாகும். மணிப்பூர் பற்றி எரிகிறதே! ஒருபக்கம் மணிப்பூர் பற்றி எரிகிறது; மறுபக்கம் டில்லி தலைநகரில் எப்படிப்பட்ட நிகழ்வுகள் மகளிருக்கு எதிராக நடைபெற்றன என்பதெல்லாம் எளிதில் மறக்கக் கூடியவையா?

அங்கே சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எவரும் கேள்வி எழுப்பாமல், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை – அங்கே இருந்த காவலர்கள் கடமையாற்றியதை மூடி மறைத்துவிட்டு, இப்படிப்பட்ட திசை திருப்பல்கள்மூலம் புதிய அரசியல் மூலதனம் தேடப்படுகிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியாமலா, இருக்கும்? தமிழ்நாடு அமைதிப் பூங்கா – கலவரப் பூமியல்ல. இதுபற்றி தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள், ‘‘தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு அவப்பெயர் ஏற்படுத்திட திட்டமா?’’ என்று கேட்டிருப்பது மிகச் சரியான கேள்வியாகும். பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, இப்படிப்பட்ட வித்தைகள், பழிதூற்றல் மேலும் மேலும் உருவாக்கப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்கா – இது கலவர பூமியாக ஒருபோதும் மாறாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்கா, இது கலவர பூமியாக ஒருபோதும் மாறாது: கி.வீரமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,K Veeramani ,Chennai ,Peace Park ,Dravidar Kazhagam ,President ,K. Veeramani ,
× RELATED இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்...