×

பரதநாட்டிய வடிவில் பாரதியார் கதைகள்!

நன்றி குங்குமம் தோழி

பரதம் நம் நாட்டின் பாரம்பரிய நடனமாக கருதப்பட்டாலும், ஒரு சிலரே அதை ஈடுபாட்டோடு கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு நாட்டியம் பயிலும் அனைவரும் அதை தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கின்றனரா என்றால் அதுவும் சந்தேகமே. சிலருக்கு இதில் ஈடுபாடும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் தங்கள் ஆர்வத்தை மறைத்து விடுகின்றனர். மேலும் நாட்டியத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கற்பவர்களும் உள்ளனர் எனலாம். இவர்களுக்கு மத்தியில் இன்னும் நமது பாரம்பரியக் கலையை அழியாமல் பாதுகாக்க சிலர் தங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அதில் சென்னையை சார்ந்த நாட்டியரங்கமும் ஒன்று. கிட்டதட்ட 28 ஆண்டுகளாக தங்களுக்கு தெரிந்த நாட்டிய கலையினை பிறருக்கு பயிற்றுவித்தும், தெரியாததை பயின்றும் பல அரங்கேற்றத்தையும் நடத்தி வருகின்றனர். நாட்டியரங்கத்தை பற்றியும் அங்குள்ள கலைஞர்களின் திறன், நடனம் பற்றியும் விளக்குகிறார், நாட்டியரங்க குடும்பத்தின் ஒரு அங்கத்தினரான ஜானகி ஸ்ரீனிவாசன்.‘‘நாட்டியரங்கம் 1995ல் மே மாதம் துவங்கி தற்போது வரை இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாட்டியரங்கத்தின் துவக்கத்தை கொண்டாடும் வகையிலும், கலைஞர்களின் கலையை ஊக்குவிக்கும் விதமாகவும் சில நாட்டிய அரங்கேற்றம் நடத்துவோம்.

ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட பத்து நாட்களுக்கு சில வித்தியாசமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதையின் கருவை கொண்டு அரங்கேற்றம் செய்யப்படும். பரதம் மட்டுமில்லை எந்த ஒரு நாட்டியம் பயின்றாலும் அதை அரங்கேற்றம் செய்வது வழக்கம். அதில் நாங்க புதுமையை கொண்டு வர யோசிச்சோம். புதுக்கவிதைகளை நாட்டியத்துடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தை அப்படியே நினைவாக்கினோம். அதனோட பலன்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வித்தியாசமான கதைக் கரு. இதில் தேவி பாரதம், உச்சவ பாரதம், பசு-பக்‌ஷி பாரதம், ஜன பாரதம் என பல்வேறு கதைக் கருவோடு எங்களோட கலைஞர்கள் தங்களுடைய நாட்டிய திறமையை அரங்கேற்றம் மூலம் வெளிப்படுத்தினாங்க.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் நடன கலைஞர்கள், அறிஞர்கள், இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், ஹரிகதா கலைஞர்கள், நாசக நபர்கள் போன்றவர்கள் கலந்து கொள்வார்கள்’’ என்றவர், பாரதியார் கதைகளையும் இந்த நாட்டிய அரங்கேற்றத்தில் இடம் பெற செய்துள்ளார்.‘‘எங்களின் இந்த நாட்டிய அரங்கேற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்டு பாரதியார் இல்லத்திலிருந்து எங்களை அழைத்து நாங்க செய்யும் அரங்கேற்றம் குறித்து விசாரித்தாங்க.

அவர்களுக்கு எங்களின் கரு பிடித்ததால், பாரதியாரின் கதைகளை நாட்டியமாக அரங்கேற்றி தரும்படி கேட்டுக் கொண்டாங்க. அதன் அடிப்படையில் எங்க குழுவில் உள்ள நடன கலைஞர்கள் பாரதியாரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டியம் ஆடுவாங்க. மேலும் ‘பாரதம் கதை கதையாம்’ என்னும் தலைப்பில் பல்வேறு சிறு கதைகள், புராணக் கதைகள், பல தலைவர்களின் வரலாறு ஆகியவற்றையும் நடனமாக அரங்கேற்றம் செய்துள்ளோம்.

நாட்டியம் என்பது பெண்களுக்கானது என்றில்லை… ஆண்களும் நடனம் பயிலலாம் என்பதை உணர்த்தும் வகையில் பாரதியார் இல்ல நாட்டிய அரங்கேற்றத்தில் ஆண் மற்றும் பெண் என இரு நடன கலைஞர்களும் இணைந்துதான் அன்று நடனம் மேற்கொள்வாங்க. அங்கு மட்டுமில்லை எங்களின் நடனங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இருவரும் இணைந்துதான் நடனம் புரிவதை வழக்கமாகக் கொண்டு வருகிறோம். குறிப்பாக சென்னையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெறும் அரங்கேற்றத்தில் இருபாலர் மட்டுமில்லாமல், அனைத்து வயது கலைஞர்களும் அரங்கேற்றம் பண்ணுவாங்க’’ என்ற ஜானகி, ஆண்டு தோறும் தென்னாங்கூரில் நாட்டியரங்கம் சார்பாக நடத்தப்படும் நடன முகாம் பற்றியும் விளக்கமளித்தார்.

‘‘தென்னாங்கூர் கோவிலில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஒரு முகாம் போல் அமைத்து அங்கு நாட்டியம் மற்றும் இசை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். இந்த தென்னாங்கூர் நாட்டிய சங்காரம் 2000ல் இருந்து நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த நாட்டிய சங்காரம் பற்றிய குறிப்புகளை இறுதி நாளன்று அங்கு இருக்கும் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் விளக்குவோம். நடன நிகழ்ச்சியினை பார்க்க வரும் குழந்தைகள் மற்றும் அந்த ஊர் மக்களை நடனம் மட்டுமில்லாமல், நிகழ்ச்சியில் நடைபெறும் சின்னச் சின்ன விளையாட்டுகளையும் விளையாட வைப்போம். இதன் மூலம் நான்கு நாட்களில் மக்கள் எங்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பிப்பாங்க. அங்க நடனம் மட்டுமில்லாமல், யோகா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பொதுவாக கலைஞர்கள் பார்வையாளர்கள் முன்பு நடனம் செய்வதற்கும் கடவுள் முன்பு நடனமாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இங்கு பாண்டுரங்கன் கோவிலில் கடவுளான பெருமாளுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜையின் போது வாசிக்கப்படும் இசைக்கேற்ப கலைஞர்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் நாட்டியம் செய்வார்கள். நடனம் ஆடுபவர்கள் அனைவரின் நடனமும் ஒன்றாக ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கடவுளுக்கு அவர்களின் பாணியில் தங்களுக்கு தெரிந்த கலை மூலம் சிறப்பு ஆராதனை செய்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாகவே தென்னாங்கூர் நாட்டிய சங்காரத்திற்கு நாங்க அழைத்து செல்லும் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பி, நீண்ட நாள் நாட்டியம் பயின்ற கலைஞர்கள் அல்லது ஏதேனும் ஒரு நடனத்தில் அறங்கேற்றம் முடித்தவர்களாகத்தான் இருப்பாங்க. மேலும் ஒவ்ெவாரு மாதமும் மூன்றாவது சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அனுபவமிக்க கலைஞர்கள் கொண்டு செயல்முறை விளக்கத்தோடு கூடிய விரிவுரை வகுப்புகளும் நடத்தி வருகிறோம். தற்போது சனிக் கிழமைகளில் மட்டும் இந்த வகுப்புகள் நடத்துகிறோம்.

அதில் சிறப்பு நாட்டிய கலைஞர்கள் விரிவுரை செய்வார்கள். எங்களின் நாட்டியரங்கத்திற்கு என தனிப்பட்ட தவில் மற்றும் பாடல் பாடுவதற்கு இசைக் கலைஞர்கள் உள்ளனர். எங்களின் நாட்டிய முகாமிற்கு அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்து வராங்க’’ என்றவர், ஆண்டு தோறும் நடைபெறும் நாட்டிய அரங்கேற்றத்தில் சிறப்பு மற்றும் அனுபவமிக்க கலைஞர்களை கவுரவித்து விருதினை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டின் சிறந்த நடன கலைஞராக ஐஸ்வர்யா நித்யானந்தத்திற்கு விருது வழங்கப்பட்டது.

நாட்டியரங்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்தார் ஐஸ்வர்யா ‘‘நாட்டியரங்கம் நடன மேடை மட்டுமில்லை, இயல், இசை, நடனம் என அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் உள்ளது. அதில் என்னுடைய பயணம் என்பது மிகவும் அபரிமிதமானது. 2006ல் ‘தச பாரதம்’ என்னும் தலைப்பில் பல புனித தலைவர்களின் புனித வார்த்தைகளை நாட்டியமாகவும், 2012ல் ‘பாந்தவ பாரத’த்தில் உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் மகத்துவத்தை எடுத்துக் கூறியதோடு, 2017ல் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த ‘தியாக பாரதம்’ என்னும் தலைப்பில் வீர மங்கை ராணி லட்சுமி பாய் அவர்களின் வாழ்க்கையினை என் நடனம் மூலம் வெளிப்படுத்தி இருக்கேன்.

நாட்டியரங்கத்தில் தொடர்ந்த என்னுடைய பயணம் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனக்கு இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நாரதகான சபா மற்றும் நாட்டியரங்க அங்கத்தினருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என புன்னகையுடன் பதிலளித்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post பரதநாட்டிய வடிவில் பாரதியார் கதைகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்