×

சிறுகதை-வர்ணா

நன்றி குங்குமம் தோழி

‘‘லயா, தனியா கார் ஓட்டிக்கிட்டுப் போற பார்த்துப் போ’’ என்றான் சரவணன், ஒரு திருமண வரவேற்புக்கு இருவருமே ஒன்றாக செல்வதாகத்தான் இருந்தது. ஆனால் வேலைப்
பளுவின் காரணமாக சரவணன் அவளுடன் வர முடியவில்லை.அதனால் சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு லயா மட்டும் தனியாக கார் ஓட்டி வந்தாள், கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுதே அம்மாவிடம் இருந்தும், குழந்தையின் பள்ளி வேன் ஓட்டுனரிடம் இருந்தும் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.

எனவே லயா தன் காரை சென்னை புறநகர் தாண்டி ஒரு பகுதியில் ஓரமாக நிறுத்தி வந்த அழைப்புகளுக்கு பதில் தந்து கொண்டு இருந்தாள். அப்போது வித்தியாசமாக தலையில் பூ வைத்துக்கொண்டு மிக அழகான ஒரு தோற்றத்தோடு சிறிது தூரத்தில் இரண்டு பேர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பேசிக்கொண்டே அவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தாள். அதில் சட்டென ஒரு உருவம் இவளை நோக்கி நடந்து வந்தது.

காருக்குள் வந்து தன்னுடைய கூரிய பார்வையால் லயாவை பார்த்து அதிர்ந்தது. பின் மீண்டும் ஒரு முறை பார்த்து. பின்வாங்கியபடி சாலையில் விரைவாக ஓடியது. லயாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.ஆனால் அந்த முகத்தை வெகு நெருக்கமாக எங்கேயோ பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது. அங்கு அலங்காரமாக நின்றவர்கள் அரவாணிகள் என்பது மட்டும் அவளுக்கு தெரிந்தது..

யோசனையுடனே லயா திருமண வரவேற்புக்கு சென்று வந்தாள். ஏனோ அன்று இரவு அந்த முகம் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது. நினைவில் மிகவும் பரிச்சயமான பழக்கமான முகமாக இருந்தது அந்த திருநங்கை முகம். தன் கணவனிடம் இரவு அந்த திருநங்கை பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள்.மனம் ஏதோ சொல்ல வருகிறது என தெரிகிறது. ஆனால் அவளால் அது என்ன என கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று அதிகாலை உறக்கத்தில் சம்பந்தமே இல்லாமல் பழைய அலுவலக தோழன் மனோ முகம் கனவில் வந்தது. உடன் கணவனை எழுப்பி ‘‘ஏங்க, அந்த திருநங்கை வேற யாரும் இல்லைங்க, நம்ம மனோதான்’’ என்றாள் சற்று கலங்கிய கண்களுடன்.

‘‘அட ஆமா, லயா நாம அவனை நினைச்சுக்கிட்டே இருக்கோம். ஆனா, பழைய உருவத்தில் நம்மளுடைய நண்பன நினைச்சுட்டு இருக்கோம்.அதான் அவன உனக்கு அடையாளம் தெரியல… அடக் கடவுளே நாம அவன பத்தி அடிக்கடி பேசுவோம். எங்க இருக்கிறான்? என்ன பண்றான்? அப்படின்னு.. இப்பதான் தெரியுது ஏன் அவன் நம்மகிட்ட திரும்பவும் வரலன்னு… இன்னிக்குதான் காரணம் புரியது. திரும்ப ஒரு முறை அவனை போய் பார்த்துவிட்டு வரலாம்’’ என்றான்.

சில நாட்கள் கழித்து அதே புறநகர்ப் பகுதியில் சரவணன் வாகனத்தை நிறுத்தினான். இருவரும் சற்று தூரம் நடந்து சென்றார்கள். அப்படிப்பட்ட ஒருவரும் அங்கு தென்படவில்லை. வெகு நேரம் காத்திருந்ததுதான் மிச்சம். ஒரே ஒரு திருநங்கை மட்டும் இவர்களை தாண்டி இரு சக்கர வாகனத்தில் சென்றார். உடன் லயாவும் சரவணனும் ஒரு சேர அக்கா என அழைத்ததுதான் தாமதம்… சட்டென வாகனத்தை பின்வாங்கி ஒரு திருநங்கை மிக அழகாக தன்னுடைய உதட்டுச் சாயம் புன்னகையை படரவிட்டார்.

‘‘என்னையா தம்பி அக்கான்னு கூப்பிட்டீங்க?’’
‘‘ஆமாங்கா… உங்களைத்தான்’’ என்றான் சரவணன் மரியாதையுடன். உடன் மகிழ்ந்த திருநங்கை ‘‘இரண்டு பேரும் ரொம்ப நாளைக்கு ஒற்றுமையாய் இருக்கணும். நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல செல்வத்தோட உங்களை இறைவன் வைக்கணும்’’ என இருவரையும் ஒரு சேர சுற்றிப்போட்டார் திருநங்கை. உடன் சரவணன் 100 ரூபாய் எடுத்து நீட்டியவுடன் ‘‘வேணாம் தம்பி… எல்லாமே காசுன்னா என்னதான் இருக்கு இந்த பொழப்புல? என் தம்பி மாதிரியே இருக்க… எனக்கு இப்ப அக்கான்னு கூப்பிட்டது என் சொந்த தம்பி என்னை கூப்பிடுகிற மாதிரி இருக்கு… அது போதும்பா போதும்பா’’ என்றாள்.

‘‘அக்கா உங்க பேரு?’’ ‘‘என் பேரு ஜூலியட்’’ என்றாள் திருநங்கை. ‘‘அக்கா உங்க கிட்ட ஒரு உதவி கேட்கிறேன். செய்ய முடியுமா?’’ என்றான்.உடன் சரவணன் ‘‘இதோ இந்த போட்டோல இருக்கிற பையன் எங்கள் அலுவலக நண்பன். எங்கள் மனோ இவன். இப்போது திருநங்கையாக மாறி…’’ என்று அதற்கு மேல் பேச முடியாமல் இருவரும் அமைதியானார்கள். ‘‘தெரியுதுப்பா… என் அறையில்தான் இவளும் தங்கி இருக்கிறாள். இப்ப இவளோட பேரு வர்ணா.’’

‘‘அதிகமா பேசமாட்டா அமைதியா இருப்பா… ஒரு அஞ்சு வருஷத்துக்கு முந்தி நானும் இவளும் சேர்ந்துதான் பாலின மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டோம்’’ எனக்கூறி முடித்தாள் ஜூலியட்.‘‘ஆமாம் கா… எங்களுக்கு அவன் மிகவும் நெருங்கிய தோழன். அவன் எங்கிருக்கிறான்… என்ன பண்றான்னு அடிக்கடி நினைச்சுக்கிட்டே இருப்போம். அதான் அன்னிக்கு லயா பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் நாங்க இன்னைக்கு அவன தேடிட்டு வந்துட்டோம்…’’ உடன் ஜூலியட் கண்களில் நீர்க் கசிந்தது. ‘‘இல்லப்பா, நாங்க எல்லாம் ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் பா… இது மாதிரி மாறினதுக்கப்புறம் எங்களை யாருமே பாக்குறதுக்கு வரவே மாட்டார்கள். இதுவரைக்கும் எங்களை நண்பர்களோ சொந்தக்காரங்களோ குடும்பத்தாரோ பார்க்க வரவில்லை.

எங்களை தேடி வர முதல் ஆட்கள் நீங்கதான்ப்பா…’’ என்று கண்ணீர் விட்டாள் ஜூலியட். ‘‘சரி, வாங்க இன்னும் மூணு கிலோ மீட்டரில்தான் வீடு இருக்கு. நான் முன்னாடியே வண்டி ஓட்டிட்டுப் போறேன். நீங்க வாங்க…’’ என்று அவர் தன்னுடைய வாகனத்தை ஓட்டிச் சென்றார். காரில் அமர்ந்ததும் இருவருமே பேசவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு மனோ, லயா, சரவணன்… மூவரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒன்றாகத்தான் வேலை பார்த்தனர்.

அனைவரும் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள். மனோவிடம் லேசான பெண்மை தன்மை அவ்வப்போது வெளிப்படும். இருந்தாலும் லயா, சரவணன் இருவரும் அவனை கேலி கிண்டல் செய்யாமல் நல்ல நண்பனாக நடத்தினார்கள். நா ட்கள் செல்லச் செல்ல அவனுடைய பெண் தன்மை அதிகமானது. அலுவலகத்தில் வேலை செய்யும் மற்ற ஆண்கள் அவனை சீண்டுவதும், பெண்கள் அவளை பார்த்தாலே ரகசிய சிரிப்பு சிரிப்பதாக விதி விளையாட ஆரம்பித்தது.

அப்போது தலைமை அதிகாரியாக இருந்த சரவணன் இது பற்றி சரி செய்ய சில கூட்டங்களை போட்டு சீண்டிய பணியாளர்களை எச்சரித்தான். சில வக்கிரம் பிடித்த வேலையாட்களை வெளியேற்றவும் செய்தான். பிறகு மீண்டும் சில முறை இதே புகாரை மனோ கொடுக்கையில் சரவணன் சற்று எரிச்சலுடன் ‘‘உனக்காக நான் எத்தனை பேரை பகைச்சிக்க முடியும்? மனோ நீ பார்த்து நடந்துக்க… எங்க போனாலும் உனக்கு இந்த தொல்லதான் இருக்குதுன்னு தெரியும். பிரச்னை உள்ள மனிதர்களிடம்இருந்து தள்ளி இருந்துக்க…’’ என சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டான் சரவணன்.

அன்றுதான் அவனை கடைசியாக பார்த்தது… சரவணன் அவனை அதற்கு பின் பல இடங்களில் தேடினான். அவன் குடும்பத்தினருக்கு தகவல் சொல்லியும் தேடினர். ஒரு முடிவும் எட்டவில்லை. அவனை காணவில்லை என ஒவ்வொரு நாளும் வருந்தியதுதான் மிச்சம்.பாவம் 12-ம் வகுப்பு படிக்கும் அவனுடைய தங்கை மிகவும் நொந்து போய்விட்டாள். அவளுடைய கல்லூரி கனவு தகர்ந்தது. தினக்கூலி வேலைக்கு பெற்றோர்களுடன் செல்ல ஆரம்பித்தாள்.

‘‘இனி எங்களுக்கு அவன் பிள்ளையே இல்லை… அவன் எங்கே போய் இருப்பான் என்று எங்களுக்கு தெரியும்’’ என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் முயற்சியை விடாத லயா, சரவணன் இருவரும் அவன் எங்கோ கண்டிப்பாக இருப்பான். எதுவும் செய்துகொள்ளும் அளவுக்கு அவன் கோழை இல்லை என பேசிக்கொள்வார்கள்.

அதன் பிறகு மனோ இல்லாத அலுவலகத்தில் வேலை செய்ய பிடிக்காமல் இருவரும் வேறு வேறு அலுவலகத்திற்கு மாறிவிட்டனர். இப்படி யோசித்துக் கொண்டே இருக்கும் போது ஒரு சிறு வீட்டின் முன் கார் நின்றது. ஜூலியட் சைகை காண்பித்து அமைதியாக வரச் சொன்னார். கதவை திறந்ததுதான் தாமதம் சரவணனையும், லயாவையும் கட்டிப்பிடித்து அழுதாள் வர்ணாவாக மாறிய மனோ.

ஆனந்தக் கண்ணீரில் நனைந்த வர்ணா இருவருக்கும் மாறி மாறி முத்தங்கள் தந்து நட்பினை வெளிப்படுத்தினாள். ‘‘லயா வா, வாடா சரவணா, உட்காருங்க… ஜூலியட் அக்கா நீயும் உட்காரு… மூணு பேருக்கும் டீ போடுகிறேன்…’’ என்று சொன்னாள் வர்ணா.‘‘அதெல்லாம் நாங்க கண்டிப்பா குடிக்கிறோம், நாங்க சொல்றதை கேட்கணும் சரியா? மனோ நீ உன் பழைய வாழ்க்கை, குடும்பம், நட்பை எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்ட… உன் சூழ்நிலை எங்களுக்கு புரியுது… நீ சட்டுனு உன் அடையாளத்தை மாத்திக்கிட்ட. ஆனா, உன் திறமையை எல்லாம் வெளிக்காட்டாம ஏன் இந்த மாதிரி இருக்கிற? நீ இந்நேரம் தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகப்பெரிய ஆளாக இருக்க வேண்டிய ஒரு நபர்.

அது நினைவிருக்கா உனக்கு?’’ என்றாள் லயா.உடன் கலங்கிய கண்களுடன் வர்ணா, ‘‘என்ன செய்ய சொல்ற லயா? உடம்புக்கும் மனசுக்கும் ஏகப்பட்ட போராட்டம் நடக்கும்போதெல்லாம் பெத்தவங்க, கூட பொறந்த தங்கச்சி, வேலை, வருமானம், நண்பர்கள் அப்படின்னு நானே என்னை வருஷக்கணக்கா சமாளித்து பார்த்தேன். ஏதோ ஒரு வழியா என்னை நானே சரி பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா, காலம் செல்ல செல்ல அவமானமும் சீண்டலும் அதிகமான போது தான் ஏன் இந்த உருவம்? எனக்கு நானே கேள்வி கேட்டுதான் என்னை நானே இந்த உருவத்துக்கு மாத்திக்கிட்டேன்.

மாத்தினப்போ எனக்கு இருந்த வலியை விட நான் ஏதோ ஒரு சாதிச்ச மகிழ்ச்சி எனக்கு கிடச்சுது. இலக்கை தொட்டுட்டதா நினைச்சு உள்ளூர சந்தோஷப்பட்டேன். அந்த அர்த்தநாரீஸ்வரர் அம்சம் நான் என பெருமையா நெனச்சேன். ஆனா, அது நிரந்தரம் இல்லன்னு கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுகிட்டேன். திரும்பவும் அதே ஏளன பார்வை, அதே அவமானம், அதே சீண்டல் எல்லாமே தொடரத்தான் செஞ்சது. வேற வழி இல்லாம தேவையில்லாத தொழிலுக்கு விரட்டப்பட்டேன்.

மனோவா இருந்து என்ன வேதனைப்பட்டேனோ அதே வேதனை இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமான வேதனையைதான் இப்பவும் அனுபவிக்கிறேன்’’ என வர்ணா கண் கலங்கினாள்.கண்ணீர் விட்ட தங்களின் நண்பனின் நிலையை பார்த்து சரவணன், லயா இருவரும் கண் கலங்கினர். ‘‘சரி, மனோ உன் நிலைமை எனக்கு புரியுது. நீ திரும்ப வேலைக்கு வரணும்’’ என்றான் சரவணன். ‘‘இல்ல சரவணா… எனக்கு எல்லாம் மறந்துடுச்சுடா…’’‘‘பரவால்ல மனோ… ரெண்டு மூணு மாசம் நானும் லயாவும் பயிற்சி கொடுத்தால் போதும்’’ என்றான் சரவணன்.

‘‘சரி என்னதான் வருணாவா மாறினாலும் என் குடும்பம் பத்தி அடிக்கடி நினைக்கிறேன். என்னால் அவங்களுக்கு உதவ முடியலன்னு ராவும் பகலும் கண்ணீர் விடறேன். அடிக்கடி என் தங்கச்சி என்கிட்ட இப்பவும் போன்ல பேசுவா, அப்பா, அம்மா கூலி வேலைக்குதான் இப்பவும் போறாங்களாம்… தங்கச்சி துணிக் கடைக்கு வேலைக்கு போகுதாம். அதை கல்லூரியில் படிக்க வைக்கணும்னு நினைச்சேன்… அது இல்லாம இப்ப கல்யாணம் பண்ணணும்னு நினைக்கிறேன். என்னால முடியல… 27 வயசுக்கு மேல கல்யாணமும் பண்ணி கொடுக்க முடியல… காசு பணம் இல்லாம வர மாப்பிளை எல்லாம் தட்டி தட்டி போகுதாம்.

அதுக்காக மட்டுமாவது நான் சம்பாதிக்கணும்னு நினைக்கிறேன் சரவணா…’’ ‘‘அம்மாவை அப்பாவை அதுக்கப்புறம் போய் பார்த்தியா மனோ?’’ ‘‘இல்ல சரவணா, என்ன ஊருக்கு வர வேணாம்னு சொல்லிட்டாங்க … நீ இப்ப இருக்கிறதும் ஒண்ணுதான், இல்லாததும் ஒண்ணுதான் அப்படின்னு கண்ணீர் விடுறாங்க. பாவம் அவர்களுக்கு என்னென்ன கனவு இருந்திருக்கும் ? எனக்கு எல்லாமே புரியுது, என்னை என்ன பண்ண சொல்ற சொல்லு சரவணா?

இப்போதும் அப்பப்ப 500, 1000 அனுப்புறேன்… வாங்கிக்கிறாங்க. ஆனா, ஊர் பக்கம் எட்டிப் பார்க்காத… அப்புறம் நாங்க உயிரோட இருக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க’’ என்றாள் வர்ணா விரக்தியாக… ‘‘சரி, அதெல்லாம் போகட்டும், இப்பவாவது வெளியுலகத்துக்கு வர்றியா மனோ?’’‘‘அப்பயும் சீண்டல்… இப்பவும் அதே சீண்டல் ஏளனம், கேவலப் பார்வை இருக்கத்தான் செய்யுது… பரவாயில்லை நான் வரேன்… இதோ ஜூலியட் அக்காவுக்கும் ஒரு ஹோட்டலில் டீ மாஸ்டர் வேலை கிடைச்சிருக்கு, நாங்க நாளையிலிருந்து வெளி உலகத்துக்கு வர்றோம் சரியா? சரவணா’’ என்றாள் வர்ணா.

பின் வர்ணா தயாரித்த மசாலா டீயை பருகிய சரவணன், லயா இருவரும் தங்கள் பழைய நண்பனுடன் பழங்கதைகள் பேசி சிரித்தது மத்தாப்பு வானிலிருந்து உதிர்வதாக இருந்தது.
அப்போது சிட்டுக்குருவிகள் வீட்டுக்குள் அங்கும் இங்கும் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. மனோவாக மாறிய வர்ணா, இப்போது தன்னுடைய குடும்பத்திற்காக திரும்பவும் மனதளவில் மனோவாக மாறி சம்பாதிக்க போகிறான்.

தொகுப்பு: பா.தேவிமயில் குமார்

The post சிறுகதை-வர்ணா appeared first on Dinakaran.

Tags : Varna ,Laya ,Taniya ,Saravanan ,Dinakaran ,
× RELATED மழை வேண்டி வருண யாகம்