×

கடல்சார் வாணிபத்தின் மூலம் தென்னிந்தியா உலகின் பல்வேறு நாடுகளை இணைத்துள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்


சென்னை: கடல்சார் வாணிபத்தின் மூலம் தென்னிந்தியா உலகின் பல்வேறு நாடுகளை இணைத்துள்ளது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். சென்னையில் கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்சார் பல்கலைக்கழகமான இந்த பல்கலைக்கழகமும் அதில் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளும் ஏராளமான நிபுணர்களையும், தலைவர்களையும் உருவாக்கியுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி என்ற முறையில் மகிழ்ச்சியடைகிறேன். கடல்சார் செயல்பாடுகளில் உங்களின் அதிக அளவு பங்களிப்பை வழங்க வேண்டும்.  நமது முன்னோர்களுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. மனித கலாச்சார வளர்ச்சிக்கு கடலின் பங்கு மிக முக்கியமானது.

தண்ணீர் நமக்கு பல்வேறு கதைகளையும், கலாச்சாரங்களையும், வளத்தையும், கனிமத்தையும் தரும் மர்மம் நிறைந்த வளமாகும். அதனால்தான் அலையை ஆள்பவர் உலகத்தை ஆள்பவர் என்று கூறுகிறோம். கடலை ஆள்பவர் உலகத்தை ஆண்டது வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் கண்டலா துறைமுகத்திலிருந்து கொல்கத்தா துறைமுகம் வரை உள்ள அனைத்து துறைமுகங்களும் உலகின் அனைத்து பகுதிகளையும் இணைக்கக் கூடியவை. விமானம், சாலைகள் வருவதற்கு முன்பே கடல் வாயிலாகத்தான் கலாச்சாரமும், வாணிபமும் நடைபெற்றுவந்துள்ளது. உலகின் மிக பழமையான துறைமுகமான லோதல் இந்துஸ் பள்ளத்தாக்கு நாகரிகத்தை உலகுக்கு கொடுத்துள்ளது. இந்த துறைமுகம் மூலம் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் பவளங்கள், நகைகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் பல்லவர்கள் ஆண்டபோது இந்திய கடற்படை மிக சக்திவாய்ந்ததாக இருந்துள்ளது. பத்து மற்றும் 11ம் நூற்றாண்டுகளில் சோழர்கள் கடல் வாணிபத்தின் மூலம் மிக தூர தேசங்களை அடைந்துள்ளனர். தமிழ்நாடு கடல்சார் தொழிலாளர்களின் மாநிலமாக உள்ளது. தெற்காசிய நாடுகளுக்கும் தென்னிந்தியாவுக்கும் கலாச்சார உறவுகள் அதிகம் இந்த கடல் வழியாகத்தான் அடைந்துள்ளது. சோழ, சேர, பாண்டியர்கள் தென்னிந்தியாவில் மேற்கொண்டிருந்த கடல்சார் வாணிபம் சுமத்ரா, ஜாவா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சீனா வரை சென்றுள்ளது. இந்தியாவில் 7,500 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை உள்ளது. அதுமட்டுமல்லாமல் 1382 தீவுகளும் உள்ளன. சுமார் 14,500 கிலோமீட்டர் தூர கடல்வழி முக்கிய கடல்வாணிபத்திற்கு உறுதுணையாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடல் வாணிபம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. 65 சதவீத வாணிபம் கடல் வாயிலாகவே நடைபெறுகிறது.

இந்தியாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் உள்ள நாடு இந்தியா. சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளிடம் உள்ள போட்டியை சமாளிக்க கப்பல் தொழிலில் நாம் சிறந்து விளங்க வேண்டும். நமது அனைத்து திறமைகளையும் இதில் செலுத்த வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சிறந்த கன்டெய்னர் துறைமுகங்களில் இந்தியாவில் 2 மட்டுமே உள்ளன. இந்திய துறைமுகங்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளில் பெரும்பாலானவை இயந்திரத்தில் இயங்கக்கூடியவையாக இல்லை. அதற்காகத்தான் சாகர்மாலா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் துறைமுக மேம்பாடு, துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

அதுமட்டு மல்லாமல் துறைமுகம் நவீனமயமாக்கல், துறைமுகங்கள் இணைப்பு, துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை வளர்ச்சி, கடல்சார் சமூக மேம்பாடு, உள்நாட்டு கடல் போக்குவரத்து ஆகியவை நடைபெறவுள்ளன. கடல்சார் நடவடிக்கைகளில் தற்போது அதிக முன்னேற்றம் தேவையாகவுள்ளது. கடல்சார் துறையில் மிக துரிதமான முன்னேற்றம் காணப்பட வேண்டும். அப்போதுதான் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சிறப்பாக மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கடல்சார் வாணிபத்தின் மூலம் தென்னிந்தியா உலகின் பல்வேறு நாடுகளை இணைத்துள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : South India ,President ,Thravupathi Murmu ,Chennai ,Tirupati Murmu ,President Thravupati Murmu Proumitam ,
× RELATED தென்னிந்தியாவில் முதன்முறையாக மூளை...