×

நவகிரகங்களும் உபகிரகங்களும் 2

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

இந்த உபகிரகங்கள் முதன்மை கிரகங்களுடன் பயணிக்கின்றன. இவை ஒளிர்வதைவிட புகை போன்ற ஒரு தன்மை கொண்டிருக்கின்றன. தூமனை வால் நட்சத்திரம் என்றுதான் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அறிவியல் ஒரு சிந்தனையிலிருந்துதான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கும். ஏற்கனவே அறிவியல் கிரகங்களை கண்டுபிடிக்கவில்லை. மற்ற சிந்தனையாளர்களின் சிந்தனையிலிருந்துதான் அறிவியல் ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளது என்பதே உண்மையான வரலாறு. உபகிரகங்களின் வழியான காரக பலன்கள் எதிர்மறையாகவே உள்ளது.

அப்படி எதிர்மறையாக இருந்தால் அதை கணிக்காமலும் ஆய்வு செய்யாமல் இருந்தாலும் சில நிவர்த்திகளை ஏற்படுத்தாது. கிரகங்கள் தங்களது கடமையை எப்படியாவது செய்துவிட்டுதான் செல்லும். இந்த உபகிரகங்களின் அதிதேவதைகள் அவற்றிற்கு உண்டான பண்புகளை இன்னும் ஆய்வு செய்தலும் நலம் என்றே தோன்றுகிறது. இது ஜோதிடத்தின் ஆய்வுக்கு மிகவும் விஸ்தரிப்பாக அமையும், இன்னும் துல்லியமான பலன்களை கணிக்கலாம் என்று பலரும் நம்புகின்றனர். மற்ற உபகிரகங்களின் விபரங்களை காணலாம்.

வ்யதீபாதன்: (ராகுவின் உபகிரகம்) வ்யதீபாதனின் பாகையை கணக்கிட முதலில் தூமனின் பாகையை அறிந்து கொள்ள வேண்டும். 360 பாகையிலிருந்து தூமனின் பாகையை கழித்தால் வரும் பாகையின் அளவு வ்யதீபாதன் இருக்கும் இடமாக உள்ளது. வ்யதீபாதனுக்கு விருச்சிகம் உச்ச வீடாகவும், ரிஷபம் நீச வீடாகவும் உள்ளது.

வ்யதீபாதனின் காரகங்கள்: (ராகுவின் உபகிரகம்) விஷ வித்தை, பிராமண சாபம், கிராம அதிகாரியாக ஆதிக்கம் செலுத்துதல், தற்கொலை செய்து கொள்ளுதல், துஷ்ட மிருகங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், நேர்மையற்ற முறையில் பணம் ஈட்டுதல், சங்கீதத்தில் நேர்த்தியான அனுபவம், அதில் ஏதேனும் ஒரு வாத்தியக் கருவியை கையாளுதல், ஆராய்ச்சி மனம் கொள்ளுதல், படிப்பறிவின்மை ஆகியவை ஆகும்.

பரிவேடன்: (சந்திரனின் உபகிரகம்) பரிவேடனின் பாகையை கணக்கிட முதலில் வ்யதீபாதனின் பாகையை அறிந்து கொள்ள வேண்டும். ஆம், வ்யதீபாதனும் பரிவேடனும் ராகு – கேதுக்களை போல 180 பாகையில் எதிர் எதிராக இருப்பர். வ்யதீபாதன் பாகையுடன் 180 பாைகயை கூட்டினால் கிடைக்கும் பாகையின் அளவு பரிவேடனின் பாகையின் அளவாகும். மிதுனம் உச்ச வீடாகவும் தனுசு நீச வீடாகவும் உள்ளது.

பரிவேடனின் காரகங்கள்: (சந்திரனின் உபகிரகம்) நேர்த்தியான அறிவு, குருவின் மீது அளவு கடந்த மரியாதை, தர்மசிந்தனை, ஆன்மாக்களை வைத்து பணம் ஈட்டுதல், வேதங்களை முறைப்படி கற்றுக் கொண்டு அதை தினம் படித்தல், தெய்வ கடாட்சம் நிரம்பி இருத்தல் ஆகியவை ஆகும்.

இந்திர தனுசு: (சுக்கிரனின் உபகிரகம்) இந்திர தனுசுவின் பாகையை கணக்கிட முதலில் பரிவேடனின் பாகையின் அளவை தெரிந்து கொள்ளல் வேண்டும். 360 பாகையிலிருந்து பரிவேடனின் பாகை அளவினை கழித்துக் கிடைக்கப் பெறுவது இந்திர தனுசுவின் பாகையின் அளவாகும். தனசு உச்ச வீடாகவும் மிதுனம் நீச வீடாகவும் இருக்கிறது.

இந்திர தனுசுவின் காரகங்கள்: (சுக்கிரனின் உபகிரகம்) அனைவராலும் புகழப்படுபவர், சன்னியாசம் விரும்புதல், வெற்றியை பற்றி கவலைப் படாமல் வாழ்தல், செவிடு, அடங்காப் பசி, கடத்தல் தொழிலில் ஈடுபடுதல், குடிகாரனாக இருப்பது, வெளிநாட்டில் பணம் ஈட்டுவதற்கு செல்லுதல், தவறான காரியத்திற்காக மந்திர உச்சாடனம் செய்தல் ஆகியவை ஆகும்.

தூம கேது: (கேதுவின் உபகிரகம்) இந்திர தனுசு பாகையுடன் 16 பாகை 40 கலையை கூட்டினால் கிடைக்கும் பாகையின் அளவு தூம கேதுவின் பாகையாகும். கும்பம் உச்ச வீடாகவும் சிம்மம் நீச வீடாகவும் உள்ளது.

தூம கேதுவின் காரகங்கள்: (கேதுவின் உபகிரகம்) உடலில் தங்கியிருக்கும் கிருமிகள், விஷம் உண்டு தற்கொலை செய்து கொள்ளுதல், பிறரை வசியம் செய்வதற்கான கலையை கற்றுக் கொள்ளுதல், தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், ரகசிய நோய்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளுதல், குருவை கொலை செய்வதால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுத்தல், வழுக்கை தலை தோற்றம், கண்கள் குருடாதல், விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுதல், கவனம் எப்பொழுதும் வேறொன்றில் இருத்தல் ஆகியவை ஆகும்.

நவகிரகங்களும் உபகிரகங்களும் தொடரும்.

The post நவகிரகங்களும் உபகிரகங்களும் 2 appeared first on Dinakaran.

Tags : Sivaganesan ,
× RELATED ருசக யோகம்