×

திருச்சுழி அருகே கல்லூரணியில் பழங்கால காவல்வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லூரணியில் காவல் வீரன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.திருச்சுழி அருகே கல்லூரியில் விவசாய நிலத்தில் பழமையான சிலை இருப்பதாக அப்பகுதி வரலாற்று ஆர்வலர்களான செல்வகணேஷ், ஜோஸ்வா போன்றோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர் மற்றும் தாமரைக்கண்ணன் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிலையானது 500 வருடங்களுக்கு முற்பட்ட விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், இந்த சிற்பமானது நான்கடி உயரத்திலும் இரண்டடி அகலத்திலும் வீரன் ஒருவன் தனது வலது கையில் குத்து ஈட்டியுடனும், இடது கரத்தில் வாளினை கீழே ஊன்றிய படியும், நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரனின் தலையில் கொண்டையானது அள்ளி முடிந்த கொண்டையும், காதுகளில் காதணியும், புஜங்களில் காப்புகளும் கைகளில் வளையல்களும், மார்பில் ஆபரணங்களும் அணிந்துள்ளார்.

இடையில் இடைக்கச்சையுடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வலது காலின் ஓரமாக ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவத்தை பார்க்கும்போது அவரது மனைவியாக கருதலாம். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து கிடைத்து வரும் வரலாற்று தடயங்களை பார்க்கும் போது பன்னெடுங்காலமாக ஒரு வரலாற்று பின்னணியை தன்னகத்தே கொண்ட ஊராக இந்த கல்லூரணியை கருதலாம் என்று தெரிவித்தனர்.

The post திருச்சுழி அருகே கல்லூரணியில் பழங்கால காவல்வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallurani ,Thiruchuzhi ,Thiruchuzhi.An ,
× RELATED திருச்சுழி அரசு மருத்துவமனையில்...