×

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நிலத்தடி நீர் மூலம் சம்பா, தாளடி இயந்திர நடவு பணி மும்முரம்

*ஆற்று பாசனம் நம்பியோர் நிலம் தரிசாக கிடக்கிறது

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நிலத்தடி நீர் மூலம் சம்பா, தாளடி இயந்திர நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆற்று பாசனம் நம்பியோர் நிலம் தரிசாக கிடக்கிறது.திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முன் பட்ட குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்து தற்போது சம்பா தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கடந்த ஜூன் மாதம் கல்லணையிலிருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்த குறுவை அறுவடையை தற்போது நிறைவு செய்துள்ளனர்.

சம்பா, தாளடி சாகுபடிக்கு தயாராகும் நேரத்தில் மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதனால் கல்லணையிலும் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. அந்தத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். தற்போது மின்மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் விதை நெல் தெளித்து தற்போது சம்பா தாளடி பணி இயந்திரம் மூலம் நடவு செய்து வருகின்றனர். ஆனால் ஆற்றுப்பாசனத்தை நம்பி வாழும் விவசாயிகள் தங்களது விவசாய நிலம் தரிசு நிலமாக இருப்பதை கண்டு மனவேதனை அடைந்துள்ளனர். இயற்கையையும், கர்நாடக அரசும் மனது வைத்தால் தான் எங்களது விளை நிலத்தில் விவசாயம் செய்ய முடியும். எங்களது வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

 

The post திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நிலத்தடி நீர் மூலம் சம்பா, தாளடி இயந்திர நடவு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirukkatupally ,Thirukkattupalli ,Samba ,Talaadi ,Tirukkattupalli ,Dinakaran ,
× RELATED திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி