×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ₹10 கோடியில் கூடுதலாக 4 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

*விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், ₹10 கோடி மதிப்பில் கூடுதலாக 4 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சோமசுந்தரம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோ.எதிரொலி மணியன், ஜெ.மெய்கண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம்:தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விளை நிலங்களாக மாற்றுவதற்கு மானிய நிதியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பியிருப்பதால் விவசாய சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. எனவே, சம்பா பருவம், பின் சம்பா பருவத்துக்கான விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். பகுதிநேர ரேஷன் கடைகளை கூடுதலாக திறக்க வேண்டும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் அதிகமாக உள்ள ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகரிப்பதால் பிரச்னை ஏற்படுகிறது.பருவமழை தீவிரம் அடையும் முன்பு, ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவைகளில் தூர்வாரி சீரமைக்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தாமதம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்.

கரும்பு அறுவடை தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக நடக்கிறது. ஆனால், தாழ்வான நிலையில் மின் வயர்கள் உள்ளதால், கரும்பு ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தாழ்வாக உள்ள மின் வயர்களை மாற்றி அமைக்க வேண்டும். மின் கம்பங்களை உயர்த்த வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பின் அடிப்படையில் தனி நபர் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்பட்ட தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு கொள்முதல் நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

அதைத்தொடர்ந்து, விவசாயிகள் தெரிவித்த பொதுவான மற்றும் தனி நபர் சார்ந்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 20 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாண் விளை பொருட்களின் உற்பத்தி அதிகரித்து வருவதால், விவசாயிகள் பயன்பெற வசதியாக தலா ₹2.50 லட்சம் மதிப்பில் 4 இடங்களில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்க அரசு அனுமதித்திருக்கிறது.

அதன்படி, சேத்துப்பட்டு தாலுகா பெரியகொழப்பலூர், போளூர் தாலுகா பால்வார்த்து வென்றான் ஆகிய இடங்களில் தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில், அவை திறக்கப்படும். அதேபோல், திருவண்ணாமலை தாலுகா நாயுடுமங்கலம், கலசபாக்கம் தாலுகா கேட்டவரம்பாளையம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டுமான பணி தொடங்கியிருக்கிறது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் ₹10 கோடியில் கூடுதலாக 4 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...