×

கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

*மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கடலூர் : கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதி, சப்-ஜெயில் சாலை, பீச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடைகள், ஓட்டல்கள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட 123 கடைகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த கடைகளை அகற்ற மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஆனால் வியாபாரிகள் கடைகளை அகற்றாததால், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் உத்தரவின்பேரில், பொறியாளர் கலைவாணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். அப்போது வியாபாரிகள் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கினர். மேலும் சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடைகளை அங்கிருந்து அகற்றினர்.

பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அங்கு வந்த துணை மேயர் தாமரைச்செல்வனிடம் வியாபாரிகள் தீபாவளி நெருங்குவதால் தங்கள் கடைகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அடுத்த மாதம் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

பின்னர் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் பல வருடங்களாக இங்கு கடை வைத்து நடத்தி வருகிறோம். எங்களுக்கு இதை விட்டால் வேறு பிழைப்பு எதுவும் கிடையாது. இப்படி திடீரென கடைகளை அகற்றினால் நாங்கள் எங்கு செல்வது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு, இங்கு கடை வைத்துக் கொள்ள எங்களுக்கு முறையாக அனுமதி வழங்கி, வாடகை வசூலித்தால் நாங்கள் வாடகை கட்ட தயாராக உள்ளோம், என்றனர்.

The post கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Manjakuppam ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்