×

பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் போல் ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம்!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு தாள் கசிவு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.இது தவிர தௌசாவில் உள்ள மஹூவா தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உட்பட மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் இன்று நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ,”ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது.2020ல் தனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்து பாஜக தோற்றதால் அமலாக்கத்துறை மூலம் தன்னை குறிவைக்கிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 114 அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

114 முறை நடத்திய சோதனைகள் தொடர்பாக 104 வழக்குகள் பதிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2014ம் ஆண்டுக்கு பிறகு 3010 முறை அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றுள்ளன. 881 முறையே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் போல் ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது.ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்பது தெளிவாக தெரிகிறது,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் போல் ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : EU government ,Rajasthan ,Ashok Kelad ,JAIPUR ,STATE CHIEF ,ASHOK KELAT ,ENFORCEMENT DEPARTMENT ,
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...