×

பரங்கிப்பேட்டை அருகே பரபரப்பு பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது

புவனகிரி, அக். 27: மாணவர்களை ஏற்றி சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேனில் இருந்த 14 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பள்ளிக்கு தினமும் மாணவர்கள் பள்ளி வேன்களில் சென்று வருகின்றனர். இந்த பள்ளி வேன் ஒன்று நேற்று காலை பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. இந்த பேருந்தில் 14 மாணவர்கள் இருந்தனர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பள்ளி வேனின் முன்புறத்தில் இருந்து லேசான புகை ஏற்பட்டது.

பின்னர் புகை வேகமாக பரவியதால் பேருந்தில் இருந்த மாணவர்களை ஓட்டுநர் பாதுகாப்பாக கீழே இறக்கினார். இதையடுத்து சிறிது நேரத்தில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென பரவியது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பள்ளி வேனின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமானது.

இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வேன் திடீரென தீப்பிடித்தது எப்படி? எதனால் வேனில் இருந்து புகை ஏற்பட்டது என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பள்ளி வேனில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், புவனகிரி வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், தீயில் எரிந்து நாசமான வேனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பரங்கிப்பேட்டை அருகே பரபரப்பு பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Barangippet ,Bhuvangiri ,Parangippet ,Dinakaran ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பஸ் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி