×

முடிந்தது புரட்டாசி விரதம் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் மீண்டும் விற்பனை சூடுபிடித்தது

வேடசந்தூர். அக். 27: புரட்டாசி முடிந்ததன் எதிரொலியாக அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வேடசந்தூர் அருகே அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தையாக திகழும் இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு, கோழிகளை வாங்க அதிகளவில் வருகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் இச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் வருகையின்றி சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் நேற்று அய்யலூர் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.7 ஆயிரத்து 500 வரையிலும், நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இனி வரும் வாரங்களில் ஆடு, கோழிகளின் விலை அதிகரிக்கும் என்றும், சந்தையில் வியாபாரம் சூடுபிடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post முடிந்தது புரட்டாசி விரதம் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் மீண்டும் விற்பனை சூடுபிடித்தது appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Dinakaran ,
× RELATED அய்யலூரில் சாலையில் கிடக்கும்...