×

ஜெ.வுக்காக செருப்பு போடாதவர், சசிகலாவுக்காக மொட்டை, எடப்பாடிக்காக ரத்த ரேகை ஆர்.பி.உதயகுமாரின் அட்டகாச அவதாரங்கள்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் 30ம் தேதி மதுரை வருகிறார். மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல உள்ள அவருக்கு வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகை தந்து மரியாதை செய்ய உள்ளார். ரத்த உறவுகள் அவரை அழைக்கும் வகையில் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் தங்கள் ரத்தத்தினால் ரேகை வைத்து, கையொப்பமிடும் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். கூட்டத்தை தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்ட அனைவரும் தங்களது விரல் ரேகையை பதியும் வகையில் ரத்தத்தால் தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்தனர். இது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமாரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். இதையடுத்து அமைச்சராக பதவியேற்றபோதும், சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றபோதும், தலைமைச் செயலக வளாகத்திலும் சட்டசபையிலும் செருப்பு அணியாமல் நடமாடி வந்தார் உதயகுமார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோவிலுக்குள் செல்லும் போது, செருப்பை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்கிறோம். முதல்வர் ‘அம்மா’ இருக்குமிடம் தான் எனக்குக் கோவில். இதனால் அவர் இருக்கும் இடத்திற்கு செருப்பு அணியாமல் சென்று வருகிறேன்’ என்றார்.

இதுதொடர்பாக பத்திரிகைகளுக்கு அவரே செய்தி கொடுத்தார். இதையறிந்த ஜெயலலிதா, உதயகுமாரை அழைத்து கண்டித்த பிறகு செருப்பு போட்டார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா கட்சியை கைப்பற்றியதும், பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகள் நடைபெற்றது. அப்போது ஆர்.பி.உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று மொட்டை போட்டார். இப்படி ஒவ்வொருவருக்கும் விஸ்வாசமாக இருப்பதுபோல் காட்சி பல்வேறு அவதாரங்களை உதயகுமார் போட்டி உள்ளார். இந்த அவதாரங்களை ஆதாரங்களுடன் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

The post ஜெ.வுக்காக செருப்பு போடாதவர், சசிகலாவுக்காக மொட்டை, எடப்பாடிக்காக ரத்த ரேகை ஆர்.பி.உதயகுமாரின் அட்டகாச அவதாரங்கள் appeared first on Dinakaran.

Tags : RB Udayakumar ,Madurai ,Muthuramalingath Devar Gurupuja and Jayanti festival ,Pasumbonn ,Ramanathapuram district ,RB ,Udayakumar ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...