×

கோத்தகிரி மலைப்பாதையில் காரை உடைத்து துவம்சம் செய்த காட்டு யானை


கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மேல்தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த மினிசுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி டிரைவர் உள்பட 3 பேருடன் சென்ற காரும் போக்குவரத்து நெரிசலால் நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை ஆண் காட்டு யானை சாலையை கடக்க முயன்றபோது போக்குவரத்து நெரிசலால் நின்று கொண்டிருந்த காரை ஆவேசமாக ஓடிவந்து தாக்க முயன்றது.

இதனை பார்த்த கார் டிரைவர் உள்பட 3 பேர் உடனடியாக காரை விட்டு இறங்கி காட்டு யானையிடமிருந்து தப்பி ஓடினர். காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் காரின் கதவுகளை உடைத்து துவம்சம் செய்ததுடன் காரை உடைத்து சேதப்படுத்தியது. மற்ற வாகன ஓட்டிகள் சத்தமிட்டு காட்டு யானையை விரட்டினர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post கோத்தகிரி மலைப்பாதையில் காரை உடைத்து துவம்சம் செய்த காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kothagiri ,Melthattapallam ,Kothagiri-Mettupalayam ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்