×

ஊட்டியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு திருவிழா துவக்கம்


ஊட்டி: ஊட்டியில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு திருவிழா தனியார் ஓட்டலில் துவங்கியது. கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி விடுவார்கள். இதில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலமானது. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கான கலவை கலப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிகழ்வை ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ என கொண்டாடி வருகின்றனர். ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரீச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, உலர் கொட்டைகளான பாதாம், பிஸ்தா, அரைக்கப்பட்ட வாசனை திரவியங்கள் ஆகியவை கொண்டு கலவை தயாரிப்பார்கள். இதில், ரம் உள்ளிட்ட மது வகைகள், பழச்சாறு, தேன் கலக்கப்பட்டு 1 மாதத்திற்கு மேல் பதப்படுத்தப்படும். பிறகு இத்துடன், மைதா மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.

பாரம்பரியமிக்க இந்த விழா ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஓட்டல் ஊழியர்கள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாத காலத்துக்கு முன்பு கேக் மிக்ஸிங் செரிமனி ஐரோப்பா, அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அதே போன்று நீலகிரி மாவட்டத்திலும் தற்போது கேக் மிக்சிங் திருவிழா துவக்கப்பட்டுள்ளது. தற்போது பல சுவைகளில் கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக உலர் திராட்சை, அத்தி, செர்ரி பழங்கள் மற்றும் முந்திரி ஆகியவற்றை மதுபானங்களுடன் கலந்து 1 மாதத்திற்கு மேல் பதப்படுத்தி பின்னர் மைதா, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்படும். இந்த கேக் வெட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும், என்றனர்.

The post ஊட்டியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Christmas Cake Making Festival ,Ooty ,Christmas ,Christians ,Christmas cake ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...