![]()
விருதுநகர்: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 11 லட்சம் பேரிடம் இருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இளைஞர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.
இத்திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 11 லட்சம் பேரிடம் இருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினம் முடிவுற்றது. மகளிர் உரிமை திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என அலுவலர்களை கேட்டுக் கொண்டோம். மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் 3 பேரை கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம். விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணங்களை எடுத்துக்கூறியபோது அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக்கொண்டனர். இம்மாத இறுதிக்குள் பரிசீலனை செய்து தகுதியானோருக்கு நவம்பர் 15 முதல் தொகை வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 11 லட்சம் பேரிடம் இருந்து மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.
