×

மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மாடுகளை பிடித்தால் ெவட்டுவோம் என சிலர் மிரட்டுகிறார்கள்: ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆவேசம்

சென்னை, அக்.26: மக்கள் உயிருக்கு மாடுகளால் ஆபத்து ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெருவில் திரியும் மாடுகளை பிடித்தால் ெவட்டுவோம் என்று சிலர் மிரட்டுகிறார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை சாலைகளில் தன்னிச்சையாக விடுவதன் மூலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதோடு மக்களைத் தாக்கி விபத்தும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், சென்னை மாகநகராட்சி சார்பில் உரிய சட்ட விதிகளின்படி தன்னிச்சையாக நடமாடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், சாலையில் தொடர்ந்து நடமாடும் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்பட்டு காயமடையும் சூழல் ஏற்படுகிறது.

இதை தடுத்திடும் வகையில், சென்னை மாநகராட்சி ஊழியர்களால் கள ஆய்வு மேற்கொண்டு மாடுகளைப் பிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நேற்று மட்டும் 3 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ஆணையாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மாடுகளைப் பிடிப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையோடு இணைந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 226 மாட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது முகவரியும், அவர்களிடம் உள்ள 1986 மாடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டும், பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையாளர்கள், அதிகாரிகள் வரும்போது மாடுகளைக் கட்டி வைத்தும் பிற நேரங்களில் தெருவில் திரியவிடுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மாடுகளைக் கட்டி வைக்காமல், சாலைகளில் திரியவிடும் மாடுகள் பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாட்டின் உரிமையாளர்கள் அவர்களின் பணியில் நாங்கள் தடங்கல் செய்வதாக நினைக்கிறார்கள். எங்களின் பிரச்னை தெருவில் திரியும் மாடுகள் தான். ஏற்கனவே அரும்பாக்கத்தில் ஒரு குழந்தை உயிர் தப்பியதே பெரிய விஷயம். அதேபோன்று 80 வயது மதிக்கத்தக்க முதியவருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக கால்நடை மருத்துவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உட்பட குழுக்களாக சென்று தெருவில் திரியும் மாடுகளை பிடித்துள்ளோம்.
இந்த பகுதியில் மட்டும் தெருவில் திரிந்த 16 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் ஆய்வுக்க செல்லும் போது அப்பகுதியில் உள்ள மக்கள், மாடுகளை பிடித்தால் ெவட்டுவோம் என்று மிரட்டுகிறார்கள். மாட்டை தெருவில் திரியவிட்டு மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க நேரிட்டால் அந்த பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாட்டை கட்டி வைக்கும்போது அதன் குணம் வேறு மாதிரியும், அதே மாடு தெருவில் இருக்கும் போது எதைக் கண்டாலும் பயப்படும் அல்லது மனிதரின் நடையை வைத்து முட்டும், குத்திவிடும். இதனால் அதை குறை சொல்ல முடியாது.

அதன் சுபாவம் அப்படி. மாநகராட்சி மூலம் பிடிக்கப்படும் மாடுகளுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது. மேலும், தெருவில் விடும் போது பிளாஸ்டிக், சாதாரண தண்ணீரை அருந்துவது போன்ற செயலில் மாடுகளை உட்படுத்தி பராமரிப்பது தவறு. மாட்டின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது என்பது எங்களின் நோக்கம் அல்ல. நங்கநல்லூரில் மாட்டின் உரிமையாளரையே குடல் வரை கொம்பால் குத்தியுள்ளது. இதுகுறித்து எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. தெருவில் திரியும் மாடுகளை மட்டுமே மாநகராட்சி மூலம் பிடிக்கிறோம். பொதுமக்களுக்கு தீங்கும் விளைக்கும் வகையில் மாடுகளை தெருவில் திரிய விடவேண்டாம் இதுவே எங்கள் வேண்டுகோள். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 61 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஆண்டில் 3,836 மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக தங்களது இடங்களில் பராமரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாடு முட்டி முதியவர் காயம்
திருவல்லிகேணி,டிபி கோயில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன்.இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,சாலையில் நின்ற மாடு அவரை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில் தலை மற்றும் கையில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஐஸ் அவுஸ் போலீசார் மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த வாரம் 17ம் தேதி சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டியதில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களுக்கு முன்னர் செல்வி என்பவரை மாடு முட்டி இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

The post மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மாடுகளை பிடித்தால் ெவட்டுவோம் என சிலர் மிரட்டுகிறார்கள்: ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Radhakrishnan ,Chennai ,Radhakrishnan Avesam ,
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...