×

என்சிஇஆர்டி குழு பரிந்துரை இனிமேல் பாடபுத்தகங்களில் ‘இந்தியா’விற்கு பதில் ‘பாரத்’

புதுடெல்லி: அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என மாற்றப்பட வேண்டுமென தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) உயர்மட்ட குழு பரிந்துரைத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியதில் இருந்தே, நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற ஒன்றிய பாஜ அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத ஜனாதிபதி’ என அச்சிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், என்சிஇஆர்டியின் சமூக அறிவியல் பாடத்திற்கான இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர் சி.ஐ.ஐசக் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்துள்ள சில பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டும். பாரதம் என்பது பழமையான பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் பாரதம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாடபுத்தகங்களில் இந்து மன்னர்களின் வெற்றிகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தற்போது நமது பாடபுத்தகங்களில் நமது தோல்விகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் முகலாயர்கள், சுல்தான்களை நமது மன்னர்கள் வென்ற வரலாறு அதிகமில்லை. அதே போல ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை 3 கட்டங்களாக பிரித்தனர். அவை பண்டைய, இடைக்கால மற்றும் நவீன இந்தியா என்றனர். இவை இந்தியாவின் இருண்ட காலத்தையும் அறிவியல் அறிவை அறியாததாகவும், வளர்ச்சியின்மையையும் காட்டுகிறது.

எனவே இடைக்கால, நவீன காலத்துடன் இந்திய வரலாற்றின் செழிப்பான பாரம்பரிய காலத்தை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். அனைத்து பாடங்களின் பாடத்திட்டத்திலும் இந்திய அறிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று என்சிஇஆர்டி தலைவர் தினேஷ் சக்லானி தெரிவித்துள்ளார்.

The post என்சிஇஆர்டி குழு பரிந்துரை இனிமேல் பாடபுத்தகங்களில் ‘இந்தியா’விற்கு பதில் ‘பாரத்’ appeared first on Dinakaran.

Tags : NCERT Committee ,Bharat ,India ,New Delhi ,National Education Research ,
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்