×

நலத் திட்டங்களை அள்ளித்தந்த நாயகன் வரலாறு படைக்க உதவுமா கெலாட்டின் சாதனைகள்?

ராஜஸ்தான் மாநிலத்தின் நலம் விரும்பும் நாயகன் என்ற பெயரைப் பெற்றவர், முதல்வர் அசோக் கெலாட். சமீபத்தில் கூட 2030க்குள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஒரு தொலைநோக்கு பார்வையை கடந்த 6ம் தேதி வெளியிட்டிருந்தார். மக்களிடம் இருந்து வந்திருந்த சுமார் 3 கோடி பரிந்துரைகளுக்குப் பிறகு இறுதி வடிவம் பெற்றுள்ளது இது. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் கெலாட். ஒன்றிய பாஜ ஆட்சியை கலைத்து விடும் என்ற தனது அச்சத்தை இவர் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தாலும், அதற்குள் எப்படியாவது அதிக பட்ச திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்ததால்தான், ‘ராஜஸ்தான் நாயகனாக’ வலம் வருகிறார். திட்டங்கள் மாநிலத்தின் கடைக்கோடி மனிதன் வரை சென்று சேர்க்கிறதா என்று உறுதிப்படுத்துவது ஒரு புறம் இருக்க, இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதிலும் இவர் தவறவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியது, சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு வெகுமதி, மருத்துவக் காப்பீடு திட்டங்கள், இலவச ஸ்மார்ட் போன் என கெலாட் அமல்படுத்திய திட்டங்கள் ஏராளம்.

இதனால்தான், கடந்த 30 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற வரலாற்றை மாற்ற அசோக் கெலாட் படு தீவிரமாக இருந்து வருகிறார். நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், வராமல் போய்விடுவோமோ என்ற தவிப்பும் இல்லாமலில்லை. ஏனென்றால், ராஜஸ்தான் வரலாறு அப்படி. 1949ம் ஆண்டு தொடங்கி 1952ம் ஆண்டு வரை ராஜஸ்தானின் முதல் முதல்வர்களாக ஹீரா லால் சாஸ்த்ரி, சி.எஸ்.வெங்கடாசார், ஜெய் நாராயண் வியாஸ், டீக்காராம் பாலிவால் ஆகிய 4 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். முதல் தேர்தல் 1952 அக்டோபரில் நடந்தது. நவம்பர் 1ல் ஜெய் நாராயண் முதல்வரானார். அதிலிருந்து 1972ம் ஆண்டு வரை 5 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் மோகன் லால் சுகாடியா தலைமையிலான ஆட்சி மட்டும் அதிகபட்சமாக 4 ஆண்டு 74 நாட்கள் நீடித்தது. 1972ல் 5 ஆண்டு ஆட்சி நடந்தாலும் 2 மற்றும் 3 ஆண்டு வீதம் பரக்கத்துல்லா கான், ஹரிதேவ் ஜோஷி முதல்வராக இருந்தனர். அதன்பிறகு 1993 வரை யாருமே முழுமையாக 5 ஆண்டு ஆட்சி செய்ததில்லை.

1993 டிசம்பரில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்ததும், பைரான் சிங் ஷெகாவத் ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தது. அதன்பிறகு தற்போது வரை ஒவ்வொரு ஆட்சியும் 5 ஆண்டு பூர்த்தி செய்திருந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாஜவில் வசுந்தரா ராஜே இரண்டு முறை 5 ஆண்டு முழுமையாக ஆட்சி செய்துள்ளார். அசோக் கெலாட் முதல்வராகியிருப்பது இது 3வது முறை. தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் நீடித்து சாதனை படைக்க கெலாட் முழுக்க முழுக்க நம்பியிருப்பது அவரை சாதனைத் திட்டங்கள் மட்டுமே. இதனால்தான் இங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘‘பாஜ ஆட்சிக்கு வந்தால் அசோக் கெலாட் அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று வாக்குறுதி அளித்தது கெலாட் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.

2003 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைத்தது போல் இந்த ஆண்டு நிகழ வாய்ப்பில்லை. 10 ஆண்டுகளில் நிலைமை மாறி விட்டது. ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே இல்லை. அந்த அளவுக்கு ஆட்சிக்கு வந்ததும் முதல் ஆண்டில் இருந்தே நலத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியிருக்கிறேன். சாதனைகள் வெற்றியடைய வேண்டிய நேரமிது என நம்பிக்கையோடு கூறுகிறார் கெலாட். ஆனால், நலத்திட்டங்களை பெற்றவர்கள் எல்லாம் காங்கிரசுக்கே வாக்களித்து விடுவார்களா என்ன என கேள்வி எழுப்பும் பாஜவினர், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான மோதல், ஜல் ஜீவன் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது, ஊழல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜவினர் முன்வைக்கின்றனர். கெலாட் நல்ல மனிதர்தான். ஆனால் நிர்வாகத் திறமை அவரிடம் சுத்தமாக இல்லை என்றும் பாஜ தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் இதையெல்லாம் தாண்டி கடைக்கோடி மக்கள் வரை சென்று சேர்ந்த கெலாட்டின் சாதனைகள் அவர் வரலாறு படைக்க வாய்ப்பை அளிக்கும் என நம்பப்படுகிறது.

* சச்சின் பைலட்டுடனான மோதலுக்கு பிறகு ஏற்பட்ட களங்கம்.

* ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றங்கள் அதிகரிப்பால் நிர்வாகத் திறமையற்றவர் என்ற முத்திரை.

* மக்கள் நல திட்டங்களால் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அதனால் உருவான அரசின் நிதி நெருக்கடி.

* கெலாட்டின் பலம்

* ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் இருந்தே மக்கள் நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியிருப்பது. கட்சி் அதிருப்தியாளர்களின் சதிகளை முறியடித்து, பாஜவை சமாளிக்க தகுதியானவர் என்ற தோற்றத்தை சிறுபான்மையின மக்களிடையே ஏற்படுத்தியது.

The post நலத் திட்டங்களை அள்ளித்தந்த நாயகன் வரலாறு படைக்க உதவுமா கெலாட்டின் சாதனைகள்? appeared first on Dinakaran.

Tags : Will Gelat ,Chief Minister ,Ashok Khelat ,Rajasthan ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...