×

ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து 4,313 பஸ்களில் சென்னை திரும்பிய மக்கள்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு 4,313 பஸ்களில் சென்னை திரும்பிய பொதுமக்களால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் மூலம் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். மேலும் விடுமுறை முடித்து சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,313 பேருந்துகள் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டது. இந்த 3,313 அரசு பேருந்துகள் சென்னை நோக்கி வந்த நிலையில், 1000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களும் சென்னை நோக்கி வந்தது.

இதனால் நேற்று முன்தினம் காலை முதலே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் குறிப்பாக தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் அதிகப்படியான வாகனங்கள் வருகையால் போக்குவரத்தை சீர்செய்ய முடியாமல், போலீசார் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறு சென்னை திரும்பிய ஏராளமானோர் தாம்பரம் பகுதியில் இறங்கி மின்சார ரயில்கள் மூலம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்றனர். மின்சார ரயில்கள் மூலம் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பொதுமக்கள் சென்றபோது, தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள நகரம் படிக்கட்டுகள் வேலை செய்யாததால் வயதானவர்கள், பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதேபோல பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏற்கனவே பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை மார்க்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலால் அதிகளவில் இருந்ததால் அதனை தவிர்க்க தனியார் ஆம்னி பேருந்துகள் வண்டலூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் வண்டலூரில் இறங்கி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் சென்னை நோக்கி சென்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், அதிக கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

The post ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து 4,313 பஸ்களில் சென்னை திரும்பிய மக்கள்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayudha ,Puja ,Vijayadashami ,Tambaram GST road ,Tambaram GST ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...