×

நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழைநீர் அகற்றம்: வந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் எடப்பாடி வருத்தம்

சென்னை:  நான் ஆய்வுக்கு வருவது தெரிந்து மழைநீரை அதிகாரிகள் வேகவேகமாக அகற்றி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.  திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது: சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. சரியாக திட்டமிடாததால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் அதிமுக ஆட்சியில், அதிகாரிகளை அழைத்து மழைநீர் தேங்கும் பகுதிகளை முன் கூட்டியே கண்டறிந்து உடனடியாக தூர்வாரினோம். இப்போது கூட, பூந்தமல்லி பகுதியில் நான் ஆய்வுக்கு வருவது தெரிந்துதான் அதிகாரிகள் மழைத் தண்ணீரை அகற்றி உள்ளனர். இதனால்தான், இந்த பகுதியில் ஒரு சொட்டு மழைநீர் தேங்கியதை கூட பார்க்க முடியவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.  இந்தப் பகுதியில் மருத்துவ முகாம் ஏற்படுத்த வில்லை. அரசும் விழிப்போடு இருக்க வேண்டும். மக்களும் விழிப்போடு இருக்க வேண்டும். என்று கூறிய அவர்,பூந்தமல்லி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மருத்துவ முகாம்களை ஏற்படுத்தவேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ₹586 கோடியில் மழைநீர் வடிகால் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. அடையாறு ஆற்றில் வெள்ளம் வரும்போது தடுப்புகள் அமைக்கப்பட்டது. திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு உள்ளது.  குடிமராமத்து பனிகள் முடிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஏரி புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த பணிகளை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். பூந்தமல்லி பகுதியில் 56 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. போரூர், அயனம்பாக்கம் ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பு இன்னும் திறக்கவில்லை, அன்னனூர் மேம்பாலம், பட்டாபிராம் டைடல் பார்க் பேஸ் 1 திறக்கவில்லை. அதிமுக அரசு கொண்டு வந்ததால் பணிகள் முடிந்தும் திறக்காமல் உள்ளது.  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறு, குறு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து திமுக நிதி பெற்றுத்தரவில்லை. டெல்டா உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் மக்களுக்கு நிதிபெற்றுத் தர வேண்டும், ஹெக்டேருக்கு ₹30 ஆயிரம் வழங்க வேண்டும். இன்ஸ்சூரன்ஸ் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாரு அவர் கூறினார்.  இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பி.வி. ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், மாபா. பாண்டியராஜன், பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் அலெக்சாண்டர், சிறுனியம் பலராமன், முன்னாள் எம்.பி. திருத்தணி ஹரி, முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாவித் அகமது, நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பூவை ஞானம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

The post நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழைநீர் அகற்றம்: வந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் எடப்பாடி வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,edapadi paranisamy ,Thiruvallur District ,Edabadi ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...