×

வினைகளை கொய்திடும் திருவிற்கோலம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவள்ளூர் செல்லும் பாதையில், கூவம் கூட்ரோடில் இறங்கி சென்று இந்த அதிசய கோயிலை அடையலாம். இந்த திருத்தலம், நைமிசாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற திருத்தலங்களில் செய்த பாவத்தை காசியை போன்ற புண்ணிய தேசங்களில் கழிக்கலாம். ஆனால், காசி முதலிய புண்ணிய திருத்தலங்களில் செய்த பாவம்கூட இந்த திருவிற்கோலம் திருத்தலம் வந்தால் நீங்கிவிடுமாம்.

ஆனால், இந்த திருத்தலத்தில் செய்த பாவம், வேறு எந்த திருத்தலம் சென்றாலும் நீங்காதாம். இந்த திருத்தலத்தின் பெயரை கேட்டாலோ, அல்லது சொன்னாலோ, அல்லது நினைத்தாலோ, அல்லது இத்தலத்தில் பிறந்தாலோ முக்தி கிடைக்குமாம். அதாவது, மேலே சொன்ன செயலில் ஏதாவது ஒரு செயலை செய்தாலும் முக்தி கிடைக்குமாம். அந்த அளவு சிறப்பு மிகுந்த திருத்தலம் இது.

‘‘ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.’’

– என்பது மூன்றாம் திருமுறையில் இருப்பத்தி மூன்றாம் பதிகத்தில் மூன்றாம் பாடல். இதில் சம்பந்தர், இவ்வூர் ஈசனை, ‘‘நல் அதிசயன்’’ என்று சொல்வதை கவனிக்க வேண்டும். மூலவர் சுயம்பு மூர்த்தி. இவரை பூஜை செய்யும் நேரத்தில் கோயில் குருக்கள்கூட இவரை தொடுவது இல்லை. அதாவது, இறைவனை தொடாமலே அனைத்து பூஜைகளும் நடக்கிறது. இன்று வரை இறைவன் மீது மனிதனின் கரம் பட்டதே இல்லை. அதனால், அய்யன் திருமேனியை ‘‘தீண்டாத் திருமேனி’’ என்று அழைக்கிறார்கள்.

அபிஷேகம் செய்வதால், லிங்கத் திருமேனியின் மீது ஏற்படும், படிவங்கள் தானாகவே உதிர்ந்துவிடுகிறது. யாரும் தொட்டு சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அதே போல சுவாமியின் திருமேனி வெண்மை படர்ந்தால் மழை கொட்டித் தீர்த்து வெள்ளம் அதிகமாக வரும். செம்மையாக மாறினால் போர் போன்ற அசம்பாவிதங்கள் நேரும். இவ்வளவு அதிசயம் மிக்க இந்த இறைவன் மணலால் ஆன லிங்கம் என்பது மற்றொரு அதிசயம். அய்யனுக்கு பதினாறு முழம் வேஷ்டி மட்டுமே சாற்றப்படுகிறது.

கோயிலுக்கு வடக்கே தூரத்தில் உள்ள திருமஞ்சன மேடையில் இருந்து, கூவம் ஆற்று நீரை கொண்டு வந்துதான் சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். தப்பித் தவறி வேறு நீரை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தால், சுவாமியின் மீது எறும்பு மொய்த்து விடுகிறது. மேலே சொன்ன எல்லா அதிசயங்களையும் மனதில் கொண்டுதான், திருஞான சம்பந்தர் இறைவனை `நல்லதிசயன்’ என்று பாடுகிறார். இந்த இறைவனை வணங்கினால் பாவம் நீங்கும் என்பதை,

‘‘அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே’’
– என்றும், இவ்வூர் இறைவனை வணங்கினால் பெரும் செல்வம் உண்டாகும் என்பதை,
‘‘நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ் சீர்மையி னானிடந் திருவிற் கோலமே’’

– என்றும் திருஞான சம்பந்தர் பாடுகிறார்.

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அரக்கர்கள் செய்த கொடுமை தாங்காமல், தேவர்களும் முனிவர்களும் ஈசனை சரண் புகுந்தார்கள். அவர்களை காக்க மேரு மலையையே வில்லாக வளைத்து, ஈசன் போருக்கு கிளம்பினார். போருக்கு கிளம்பிய இறைவனை தேவர்கர்கள் பலரும் கூட்டு சேர்ந்து தேர் வடிவம் எடுத்து தாங்கினார்கள். தேவர்கள் தேராக மாற, அந்தத் தேரின் மீது ஏறி அரசுரர்களை அழிக்க புறப்பட்டார் இறைவன். தன்னை வழிபடாமல், இறைவன் போருக்கு கிளம்பியதால், விநாயகர் கோபம் கொண்டு தேரின் அச்சை முறிந்தார். தேர் அச்சு முறிந்து தேரின் குடை சாய ஆரம்பித்தது.

ஆகவே, இறைவன் தேரைவிட்டு வெளியில் குதித்தார். குதித்த இறைவனை நந்தியின் வடிவம் கொண்டு திருமால் தாங்கினார். அப்போது, தேவர்கள் அனைவரும் தங்கள் உதவியால்தான் இறைவன், அசுரர்களை கொல்கிறார் என்று ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார் இறைவன். ஆகவே, ஒற்றை புன்னகையால் அசுரர்கள் நகரத்தையே அழித்தார். இந்த திருவிளையாடல் நடந்தது இந்த திருப்பதியில்தான். அதற்கு சாட்சியாக இத்தல விநாயகர் ‘‘அச்சறுத்த விநாயகர்’’ என்று அழைக்கிறார்கள்.

முஞ்சிசேகர், கார்கோடகர் என்ற முனிவர்களின் தவத்தினை ஏற்று திருவாலங்காட்டில், ஊர்த்துவ தாண்டவம் ஆடி, காளியின் செருக்கை அழித்தார் இறைவன். ஆனாலும் காளியின் சினம் அடங்கவில்லை. ஆகவே காளியை, திருவிற்கோலத்தில், காத்தல் திருநடம் புரிவதாகவும், அங்கு சென்று அதை தரிசித்து நற்கதி அடையும் படி இறைவன் மொழிந்தார். அதன்படி இங்கு இறைவன் புரியும் ‘‘காத்தல் திருநடனத்தை’’ தரிசித்து காளி நற்கதி அடைந்ததாக வரலாறு.

கூரம் அதாவது ஏர்கால் பூமியில் பதிந்த இடத்தில் ஈசன் சுயம்புவாக தோன்றினார். கூரம் முறிந்து நின்ற இடம் என்பதால் கூரம் என்று இத்தலம் அழைக்கப் பட்டு காலப் போக்கில் அது கூவமாக மாறியது.அம்பிகை கிழக்கு நோக்கிய சந்நதியில் அருள்பாலிக்கிறாள். அவளின் முன்னே சக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, அம்பிகை வரப் பிரசாதியாக இருக்கிறாள் என்பது அன்பர்கள் பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.

வெற்றியும் ஆளுமைத் திறனையும் அருளி, திருமணத் தடையை நீக்கி, பல சௌபாக்கியங்களை அருளும் திருவிற்கோலம் திரிபுராந்தக சுவாமியையும், திரிபுராந்தக நாயகியையும் பணிந்து நல்ல கதியை அடைவோம். வேண்டிய வரங்கள் எல்லாம் பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post வினைகளை கொய்திடும் திருவிற்கோலம் appeared first on Dinakaran.

Tags : Thiruvilkolam ,Kanchipuram ,Thiruvallur ,Chungwar Chatram ,Koovam Koodrod ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...