×

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் குழு பல்வேறு தவறுகளைச் செய்துள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதி கண்டனம்

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் குழு பல்வேறு தவறுகளைச் செய்துள்ளதாக ஐகோர்ட் கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாளராக உள்ள செல்வம் மற்றும் சுவாமிநாதன் ஆகிய இரண்டு ஊழியர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில், பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டு அல்லது 14 ஆண்டுகள் தொழில்நுட்ப பணியாளர்களாக பணி புரிந்தவர்களுக்கு சிறப்பு தகுதி உயர்வு, பண பலன்கள் உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் பணி உயர்வும் வழங்கப்பட்டது.

இந்த பதவி உயர்வு வழங்கியபோது அதிக சம்பளம் வழங்கியவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பதவி உயர்வும் வழங்காத எங்களுடைய சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு முரணானது. எங்கள் சம்பள பிடித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விசாரிக்கவும் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

மேலும் தீர்மானங்கள் குறித்து விசாரிக்க தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளர் தனிக் குழுவை அமைக்க தலைமை செயலாளருக்கு நீதிபதி ஆணையிட்டார். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் 10, 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே தேர்வு நிலை, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது தமிழக அரசு இயற்றிய விதி. ஆனால் அந்த விதியை எந்த பல்கலைக்கழகமும் பின்பற்றுவதில்லை. இதுபோன்ற சிண்டிகேட் உறுப்பினர்களை தமிழக அரசு நியமனம் செய்கிறது. ஆனால் சிண்டிகேட் உறுப்பினர்கள் தவறான சிண்டிகேட் அமைத்து பல்வேறு முடிவுகளை எடுக்கின்றனர்.

சிண்டிகேட் குழு உறுப்பினர் என்ற விளம்பரமும் தேடி கொள்கின்றனர். மேலும் அரசு அறிக்கைக்கு எதிராக பல்வேறு முடிவுகளை எடுக்கின்றனர். இதனை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது. எனவே பல்கலை.யில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, தவறு செய்யும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி காட்டமாக கூறினார். அதுமட்டுமின்றி இவர்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆய்வு செய்வதற்காக தமிழ் வளர்ச்சி கழகம் ஒரு தனி செயலாளரை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் குழு பல்வேறு தவறுகளைச் செய்துள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Syndicate Committee ,Thanjay Tamil University ,ICOURT ,Madurai ,Tanjai Tamil University ,Thantai ,Syndicate Committee at Tanjai Tamil University ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...