×

செங்கல்பட்டு அருகே பேருந்து விடக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மேலச்சேரி கிராமத்துக்கு அரசு பேருந்து விடக்கோரி இன்று காலை 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலச்சேரி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு நீண்ட காலமாக அரசு பேருந்து மூலம் சென்று படித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் மேலச்சேரி கிராமத்தில் நிற்காமல் சென்று வருகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் மகளிர் அரசு பேருந்துகளும் நிற்பதில்லை.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேருந்து நிற்காததால், மிகத் தாமதமாக சென்று வருகின்றனர். இதையடுத்து மேலச்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை மாணவ-மாணவிகள் மற்றும் கிராமத்தினர் புகார் அளித்தும், இதுவரை மேலச்சேரி கிராமத்தில் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்று வருகின்றன. இந்நிலையில், மேலச்சேரி கிராமத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று காலை மேலச்சேரி கிராமம் அருகே காஞ்சிபுரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான கிராம மக்கள் அவ்வழியே சென்று வாகனங்களை சிறைப்பிடித்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பாலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மேலச்சேரி கிராமத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லாத வரை எங்களின் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, மேலச்சேரி கிராமத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பயணிகளை ஏற்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர், தற்காலிக ஏற்பாடாக அங்கு பள்ளி, கல்லூரி செல்வதற்கு காத்திருந்த மாணவ-மாணவிகளை அவ்வழியே சென்ற அரசு பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு அருகே பேருந்து விடக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Melachery ,Chengalpattu-Kanchipuram ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...