×

நாமக்கல் நகரில் ஆயுத பூஜையையொட்டி குவிந்த 98 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

*55 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

நாமக்கல் : ஆயுத பூஜையையொட்டி நாமக்கல் நகரில் 98 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. அனுமதி இல்லாமல் சாலையோரங்களில் கடை போட்ட 55 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில், வணிக நிறுவனத்தினர் தங்களது நிறுவனங்களின் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

லாரிகள் நிறைந்த நகரமான நாமக்கல் பகுதியில் உள்ள லாரி பட்டறைகள் மற்றும் லாரி போக்குவரத்து நிறுவனங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் மற்றும் அதன் சார்ந்த தொழிற்பட்டறைகளில், ஆயுத பூஜை விழாவை நிறுவனத்தினர் மற்றும் பணியாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆயுத பூஜையையொட்டி நாமக்கல் நகரில் முக்கிய சாலைகளில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளில் தேங்காய், பூ, பழம், பொறி, வாழைமரம், மா இலை பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. நகராட்சியிடம் அனுமதி இன்றி இது போன்ற சாலையோர கடைகள் செயல்பட்டன.

நாமக்கல் நகராட்சி பணியாளர்கள் சாலையோர கடைகளுக்கு ₹200 வீதம் அபராதம் விதித்தனர்.சாலையோரம் வியாபாரம் செய்யும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு மீதமுள்ள பொருட்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு சென்று விட்டனர். மேலும் நகரின் பல சாலைகளில் தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைக்கப்பட்டு சாலைகளில் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

இதுபோன்ற குப்பைகளை அகற்ற நேற்று காலை நகராட்சி பணியாளர்கள் களமிறங்கினர். நகராட்சி ஆனையர் சென்னுகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் 350க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், 50க்கும் மேற்பட்ட நகராட்சி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று காலை முதல் மாலை வரை நகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், வீதிகளில் வெளியேற்றப்பட்டிருந்த ஆயுதபூஜை கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் மும்முரமாக அகற்றினர். இதில் நேற்று ஒரே நாளில் 98 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.

இது குறித்து நாமக்கல் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, தற்காலிக கடைகள் அதிகமாக நாமக்கல் நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி போடப்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலான வியாபாரிகள், இரவில் மீதமான பொருட்களை அதே இடத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட குப்பைகள் அதிகமாக காணப்பட்டது.

இவற்றை நேற்று காலை முதல் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக சேகரித்து நகராட்சிக்கு சொந்தமான உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு குப்பைகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. நகரின் பல இடங்களில் அனுமதி இல்லாமல் சாலைகளில் கடை போட்டு இருந்த, 55 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் நகரில் உள்ள ஆயுத பூஜை கழிவுகள் அகற்றும் பணி இன்று 2வது நாளாகவும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாமக்கல் நகரில் ஆயுத பூஜையையொட்டி குவிந்த 98 டன் குப்பை கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja ,Namakkal ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று