×

பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடியில் விடுமுறை முடிந்து திரும்பும் வாகனங்களால் நெரிசல்: 10 கவுன்டர்கள் இருந்தும் திணறல்


செங்கல்பட்டு: ஆயுத பூஜையை ஒட்டி 4 நாட்கள் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு வாகனங்கள் மூலமாக நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் மதுராந்தகம் அருகே ஆத்தூர் மற்றும் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் சிறப்பு கவுன்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கியும், நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் ஊழியர்கள் திணறினர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்வதால் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி (நேற்று)வரை ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்காக தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை உள்பட பல்வேறு தென்மாவட்டங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்து உள்பட பல்வேறு வாகனங்கள் மூலமாக குடும்பத்தினருடன் லட்சக்கணக்கான மக்கள் சென்றிருந்தனர். பின்னர், தங்களின் சொந்த ஊர்களில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜையை கொண்டாடிவிட்டு, நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏராளமான மக்கள் அரசு பேருந்து உள்பட பல்வேறு வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் நேற்றிரவு முதல் சென்னையை நோக்கி பல்வேறு வாகனங்களில் படையெடுத்து வருவதால், மதுராந்தகம் அருகே ஆத்தூர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கமாக 6 கவுன்டர்களுக்குப் பதிலாக, சென்னை நோக்கி செல்லும் பகுதியில் கூடுதலாக 4 கவுன்டர்களுடன் மொத்தம் 10 கவுன்டர்கள் இயங்கி வருகிறது. எனினும், வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுராந்தகத்தில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதால் டோல்கேட் ஊழியர்கள் வாகனங்களுக்கு டிக்கெட் வழங்குவதில் திணறி வருகின்றனர். பரனூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை செங்கல்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு, தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்து வருகின்றனர்.

எனினும், இன்று அதிகாலை முதல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் சிங்கப்பெருமாள்கோவில், மறைமலைநகர், பொத்தேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம் வரை வெளியூரில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இதனால் குறித்த நேரத்தில் பணிக்கோ மற்றும் பள்ளிக்கோ செல்ல முடியாமல் ஏராளமான மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் மக்களை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக மாநகர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. எனினும், செங்கல்பட்டு முதல் சென்னை நகர எல்லையான பல்லாவரம் வரையில் நீண்ட வரிசையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

The post பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடியில் விடுமுறை முடிந்து திரும்பும் வாகனங்களால் நெரிசல்: 10 கவுன்டர்கள் இருந்தும் திணறல் appeared first on Dinakaran.

Tags : Paranur ,Athur ,Chengalpattu ,Ayudha Puja ,Baranur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அறுவடை செய்ய நெல்...