×

திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜயதசமி விழாவையொட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

*அங்கன்வாடி மையங்களில் ஆர்வமுடன் சேர்த்தனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், விஜயதசமி விழாவை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையால் இந்த ஆண்டு ஆயுத பூஜை விழா வழக்கத்தைவிட உற்சாகமாக காணப்பட்டது.

மேலும், வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி ஆயுதபூஜையை குடும்பத்தினருடன் கொண்டாடினர். மேலும், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை அலங்கரித்து மகிழ்ந்தனர்.இந்நிலையில், ஆயுதபூஜையின் தொடர்ச்சியாக நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. சரஸ்வதி பூஜை என அழைக்கப்படும் விஜயதசமி நாளில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அரசு பள்ளிகளில் ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களிலேயே மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது. எனவே, அரசு பள்ளிகளில் நேற்று குறிப்பிடத்தக்க அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

அதேநேரத்தில், ஒரு சில தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் நேற்று மாணவர் சேர்க்கை அதிக அளவில் நடந்தது. பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் மாணவர்களை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். நெல் மணிகளில் `அ’ எனும் முதல் எழுத்தை எழுத வைத்து, மாணவர் சேர்க்கையை நடத்தினர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கலசபாக்கம்: கலசபாக்கம் மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் செலுத்தினர். மேலும், அங்கன்வாடி மையத்திற்கு வந்த குழந்தைகளை உற்சாகத்துடன் வரவேற்ற பணியாளர்கள், பச்சரிசியில் `அ’ என்ற முதல் எழுத்தை எழுதுதற்கு பழக வைத்து, சீருடைகள் வழங்கி வாழ்த்தினர். இந்நிலையில், கலசபாக்கம், பூண்டி, சிறுவள்ளூர், மோட்டூர், கேட்டவரம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் சேர்க்கை குறித்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் நெ.சரண்யா ஆய்வு செய்தார்.

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் அங்கன்வாடி மையத்தில் நேற்று விஜயதசமி முன்னிட்டு குழந்தைகள் சேர்ப்பு நடந்தது. பெற்றோர் ஆர்வமுடன் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மைய பணியாளர் சுஜாரதி, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சத்தான உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி கூறினார். பின்னர், அரிசியில் குழந்தைகளின் விரலால் `அ’ என எழுத வைத்தார்.

செங்கம்: செங்கம் அடுத்த நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் புதிய மாணவர்களை வரவேற்று அரசின் பாடப்புத்தகங்களை வழங்கினர். இதேபோல், செங்கம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜயதசமி விழாவையொட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Vijayadasami festival ,Tiruvannamalai district ,Anganwadi ,Tiruvannamalai ,Thiruvannamalai District ,Anganwadis ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...