×

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் பேச்சுவார்த்தை..!!

காஞ்சிபுரம்: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்ட குழுவினர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காஞ்சிபுரம் சுற்றுவட்டார 13 கிராமங்களை உள்ளடக்கி கிட்டத்தட்ட 4791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் சென்னைக்கு அடுத்தபடியாக அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 456வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள், தங்களுடைய விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் முழுவதுமாக போகிற காரணத்தினால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, பரந்தூர் விமான நிலையத்திற்காக இடங்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு மச்சேந்திர நாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது அப்பகுதியில் உள்ள நிலங்களையும், ஏரி, குளம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க தயாராக உள்ளது.

இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்ட குழுவினர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை பதிவுசெய்ய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விமான நிலைய அமைவிடத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். மச்சேந்திர நாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினரை நாளை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Paranthur ,Kanchipuram District Collector ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...