×

குமரி அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மேலும் 2 மாணவிகளுக்கு தொல்லை

*உதவி லேப் டெக்னீசியன் கைது

நாகர்கோவில் : குமரி அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பயிலும் இரு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவருக்கு தொல்லை கொடுத்ததாக மருத்துவக்கல்லூரியின் உறைவிட மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்து வரும் டாக்டர் ஆண்டனி சுரேஷ் (52) என்பவரை கடந்த 22ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3ம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் மனு அனுப்பி இருந்தனர்.

அந்த புகார் மனுக்களில், அரசு ஆயுர் வேத மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளராக இருக்கும் சுசீந்திரம் அருகே உள்ள காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (35) என்பவர் தங்களுக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்ததுடன், விரும்ப தகாத செயல்கள் செய்து வெறுப்பூட்டும் வகையில் பின் தொடர்ந்து வருவதும், தொடர்பு கொள்ள முயற்சிப்பதுமாக இருந்து வருவதாக தெரிவித்திருந்தனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டார்.

இதன் பேரில் கோட்டார் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு லேப் டெக்னீசியன் வைரவன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 (A), 354(D), 509 மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர், மற்றும் மருத்துவ மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2 நாளில் திருமணம்

தமிழ்நாட்டில் ஆயுர்வேதத்துக்கு என அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே கல்லூரி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி என்பது முக்கியமானதாகும். தற்போது எழுந்துள்ள இந்த புகார்கள், கைது நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரி வட்டாரத்தில் விசாரித்த போது, தற்போது கைதாகி உள்ள வைரவன் மீது ஏற்கனவே டிசம்பர் மாதம் இந்த புகார்கள் வந்து, சுகாதாரத்துறை மூலம் அவருக்கு ஒழுங்கு நடவடிக்கைக்கான 17 (பி) விதியின் கீழ் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது திடீரென காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் என்றனர். வைரவனுக்கு இன்னும் 2 நாளில் திருமணம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குமரி அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மேலும் 2 மாணவிகளுக்கு தொல்லை appeared first on Dinakaran.

Tags : Kumari Government Ayurvedic Medical College ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...