×

தொடர் விடுமுறைக்கு பின்பு சென்னை திரும்ப 3,313 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை ஏற்பாடு

சென்னை: ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர்விடுமுறை முடிந்து வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 3313 பேருந்துகள் போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொடர்விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதன்காரணமாக போக்குவரத்து துறை தரப்பில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி பைபாஸ், தாம்பரம் மெப்ஸ் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

குறிப்பாக, அரசு பேருந்துகளில் இருந்து மட்டும் சிறப்பு பேருந்துகள் மூலமாக 4.50 லட்சம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டனர். அதன்படி, விடுமுறை தினம் முடிந்ததையொடுத்து பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப போக்குவரத்து துறையினரால் தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 1213 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று மாலை முதல் விடிய விடிய லட்சக்கணக்கானோர் சென்னை வந்தவண்ணம் இருந்தனர்.

குறிப்பாக, பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதை காணமுடிந்தன. போக்குவரத்தை சரிசெய்ய சென்னை மற்றும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் விடுமுறைக்கு பின்பு சென்னை திரும்ப 3,313 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayudha ,Puja ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!