×

ஓட்டேரி காவல் நிலைய சிறார் மன்றத்தில் மாணவர்களுக்கு கல்வி பயிலரங்கம்: துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்

பெரம்பூர்: சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமின்றி போலீசார் பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த பல வருடங்களாக பாய்ஸ் கிளப் என்ற பெயரில் போலீசார் அவர்களது காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அவர்களின் கல்விக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஓட்டேரி போலீசார் அடுத்தகட்டமாக, மாணவ, மாணவிகளுக்கான கல்வி பயிலரங்கத்தை தொடங்கியுள்ளனர். ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மங்களபுரம், சந்திர ஜோதி சமாதி சாலையில் ஓட்டேரி போலீசார் சார்பில் புனரமைக்கப்பட்ட பாய்ஸ் கிளப் கட்டிட திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதனை, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் திறந்து வைத்தார். உதவி கமிஷனர்கள் அழகேசன், தமிழ்வாணன், செம்பேடு பாபு உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். பொதுவாக பாய்ஸ் கிளப் எனப்படும் சிறார் சிறுமியர் மன்றத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், கல்விக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் ஓட்டேரி போலீசார் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த புதிய பாய்ஸ் கிளப்பில் தினமும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை ஓட்டேரி பகுதியைச் சார்ந்த 150 மாணவ, மாணவியருக்கு கல்வி பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது. இதற்காக 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் அவர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பார்கள்.

இதுகுறித்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா கூறுகையில், ‘‘படிப்பை பாதியில் நிரத்தியவர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில், கல்வியில் அவர்களை ஈடுபடுத்தவும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ மாணவியர் தனியாக பணம் கொடுத்து டியூஷன் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாலும் தற்போது பாய்ஸ் கிளப் சார்பில் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இந்த மாலை நேர வகுப்புக்கள் எடுக்கப்படும். இது மேலும் விரிவுபடுத்தப்படும். இதனை மாணவ, மாணவியர் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

The post ஓட்டேரி காவல் நிலைய சிறார் மன்றத்தில் மாணவர்களுக்கு கல்வி பயிலரங்கம்: துணை கமிஷனர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Otteri Police Station Juvenile Forum ,Perambur ,Chennai ,Otteri Police Station ,Juvenile Forum ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...