×

தாம்பரம் அருகே தேவாலயம் சார்பில் ஆர்ச் அமைக்க பாஜவினர் எதிர்ப்பு: போலீசார் குவிப்பு

தாம்பரம்: தாம்பரம் – திருநீர்மலை சாலையில், ரமேஷ் நகர் பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் பொன் விழா ஆண்டையொட்டி ரமேஷ் நகர், 1வது தெரு – திருநீர்மலை சாலை சந்திப்பில் ஆர்ச் அமைப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டு இருந்தனர். இது தொடர்பாக ஆலய நிர்வாகிகள் சார்பில் பல்வேறு அரசு அலுவலகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆர்ச் அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஆனால் இதுவரை அதற்கான அரசு ஆணை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகிகள் ஆர்ச் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். தகவலறிந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான பாஜவினர் சம்பவ இடத்திற்கு வந்து, பொது இடத்தில் ஆலயத்தின் ஆர்ச் அமைக்க கூடாது என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனடியாக, தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஆலய நிர்வாகிகள் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இங்கு நாங்கள் ஆர்ச் அமைப்போம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல பாஜவினர் பொது இடத்தில் ஆலயத்தின் ஆர்ச் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து கலையை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் கூறுகையில், ‘‘ஆர்ச் அமைப்பதற்கு தாம்பரம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கிறிஸ்தவ மக்கள் ஆர்ச் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தபோது பாஜவினர், இந்து முன்னணியினர் பிரச்னை செய்கின்றனர். அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இந்திய திருநாட்டில் இதுபோன்ற தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் பாஜவினரை கண்டிக்கிறோம். இப்பகுதியில் ஆலயத்தின் ஆர்ச் கட்டுவதற்கு இஸ்லாமிய மக்களும், இந்து மக்களும் துணை நின்று முழு ஒத்துழைப்பை வழங்குவோம்,’’ என்றார்.

The post தாம்பரம் அருகே தேவாலயம் சார்பில் ஆர்ச் அமைக்க பாஜவினர் எதிர்ப்பு: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tambaram ,Tiruneermalai road ,Ramesh Nagar ,St. Anthony ,
× RELATED தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500...