×

மயிலாப்பூரில் 10 நாள் நடைபெற்ற நவராத்திரி பெருவிழா நிறைவு: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

சென்னை: மயிலாப்பூர கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 10 நாட்களாக நடைபெற்ற நவராத்திரி பெருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், மீனாட்சி அலங்காரத்தில் அம்மனுக்கு நடைபெற்ற அபிராமி அந்தாதி வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மயிலாப்பூர கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிா, கொலுவுடன் கடந்த 15ம் தேதி தொடங்கி, நேற்று வரை 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. முதல் நாள் தமிழ்நாடு முதல்வர் துணைவியார் துர்கா ஸ்டாலின் நவராத்திரி பெருவிழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அன்றைய தினம் மகேஸ்வரி அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மனுக்கு நடைபெற்ற சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

2ம் நாளில் சரஸ்வதி அலங்காரத்தில் கன்யா பூஜையும், 3ம் நாள் தபஸ் காமாட்சி அலங்காரத்தில் தேவி மஹாத்மியம் பூஜையும், 4ம் நாள் வராஹி அலங்காரத்தில் நவாவரண பூஜையும், அதனைத் தொடர்ந்து 5ம் நாள் லட்சுமி அலங்காரத்தில் லலிதா சகஸ்ரநாம பூஜையும், 6ம் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் திருவிளக்கு பூஜையும், 7ம் நாள் பத்மாசினி அலங்காரத்தில் சவுந்தர்ய லகரியும், 8ம் நாள் துர்கை அலங்காரத்தில் சுஹாசினி பூஜையும், 9ம் நாள் கம்பா நதி அலங்காரத்தில் இசை வழிபாடும், நிறைவு நாளான நேற்று மீனாட்சி அலங்காரத்தில் அம்மனுக்கு அபிராமி அந்தாதி வழிபாடும் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் மாம்பலம் சகோதரிகள், திரையிசை பாடகர் வினயா கார்த்திக் ராஜன், கலைமாமணி வீரமணி ராஜூ, தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியா குழுவினர், காயத்ரி வெங்கட்ராகவன், வீரமணி கண்ணன், சுசித்ரா பாலசுப்பிரமணியம், நித்யா மகாதேவன், மஹதி, சுருதிலயா இசைச்குழு போன்றோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் இறையன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மயிலாப்பூரில் 10 நாள் நடைபெற்ற நவராத்திரி பெருவிழா நிறைவு: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : 10-day Navratri festival ,Mylapore ,CHENNAI ,day Navratri festival ,Karpakampal ,Kapaleeswarar Temple ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது