தஞ்சாவூர்: ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பி தமிழர்களின் கட்டிட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் பிறந்த தினம் ஆண்டு தோறும் அரசு சார்பில் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு, மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதயவிழா டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினரின் மங்களஇசை மற்றும் களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் நேற்று தொடங்கியது. சதய விழாவை முன்னிட்டு இந்தாண்டு தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்குபெற்ற சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி பெரிய கோயில் வளாகத்தில் மாலை நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றை தொடர்ந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மாமன்னன் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (26ம்தேதி) காலை நடைபெறுகிறது. அரசு சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
The post தஞ்சையில் ராஜராஜ சோழன் 1038வது சதயவிழா துவக்கம் appeared first on Dinakaran.