×

முதல்வரின் மாஜி தனி செயலாளர் ஒடிசாவில் அமைச்சர் அந்தஸ்தில் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி: பிஜு ஜனதாவில் இணைகிறாரா? அடுத்த தேர்தலில் போட்டியா?

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் தனிச் செயலாளரான வி.கே.பாண்டியனுக்கு அம்மாநில அரசில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதல்வரின் தனிச் செயலாளராக செல்வாக்குடன் வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி. கார்த்திகேய பாண்டியன் அரசுப் பணியில் இருந்து கடந்த 20ம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கு, ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அவருக்கு அம்மாநில அரசில் கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாண்டியன், ஒடிசாவில் 5டி (மாற்றத்திற்கான முயற்சிகள்) திட்டங்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இது தொடர்பாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் “நமது ஒடிசா புதிய ஒடிசா” திட்டத்தின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி. இவர் முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், விரைவில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து பதவி வழங்கப்பட்டுள்ளது ஒடிசா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் களமிறங்க கூடும். பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை நவீன் பட்நாயக் சந்தித்த போது மூன்றாவது நபராக பாண்டியன் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த முதல்வரா?

காங்கிரஸ் எம்பி சப்தகிரி உலகா தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் அடுத்த தேர்தலுக்கு முன் பாண்டியன் முதல்வராக பதவியேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒடிசாவில் அதிகார அமைப்பு அப்படித்தான் உள்ளது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விடுமுறையாக இருந்தாலும் கூட 3 நாட்களில் விஆர்எஸ் அங்கீகரிக்கப்பட்டது. சூப்பர் பாஸ்ட்டாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.

* பெருமை சேர்க்கும் தமிழர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000-ம் ஆண்டு ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002-ம் ஆண்டு அம்மாநிலத்தின் கலகண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்ற அவர், அதன்பிறகு பல மாவட்டங்களின் ஆட்சியர், துறைகளின் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

The post முதல்வரின் மாஜி தனி செயலாளர் ஒடிசாவில் அமைச்சர் அந்தஸ்தில் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி: பிஜு ஜனதாவில் இணைகிறாரா? அடுத்த தேர்தலில் போட்டியா? appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Odisha ,Tamil Nadu ,Biju ,Janata ,Bhubaneswar ,Naveen Patnaik ,VK Pandiyan ,Dinakaran ,
× RELATED ஒடிசா முதல்வர் பட்நாயக் வேட்பு மனு தாக்கல்