×

கறவை மாடு வாங்குவதற்காக 142 பேருக்கு கடனுதவி: ஆவின் பொது மேலாளர் தகவல்

 

திருவள்ளூர்: ஆவின் மூலம் பால் உற்பத்தி அதிகரிப்பை நோக்கமாக கொண்டு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் 142 பேருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.79.50 லட்சம் வரை கடனாக வழங்கப்பட்டுள்ளதாக ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் ஆவின் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு நாள்தோறும் பால் கொள்முதல் 90 ஆயிரம் லிட்டராக இருந்தது. தற்போது 1.25 லட்சம் லிட்டர் வரையில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதில் காக்களூர் பால் பதப்படுத்தும் நிலையம் மூலம் குளிர்வித்து 95 ஆயிரம் லிட்டர் வரையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள பாலை பதப்படுத்தி பால்கோவா உள்ளிட்ட பால் உணவுப் பொருட்கள் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆண்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு வகையான கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆவின் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவி மூலம் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் 142 பேருக்கு ரூ.50 முதல் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடுகள் வாங்க ரூ.79.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஆவின் பொது மேலாளர் ஜி.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

The post கறவை மாடு வாங்குவதற்காக 142 பேருக்கு கடனுதவி: ஆவின் பொது மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aa. ,Tiruvallur ,Aavin ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...