×

மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் உரிமைகள் திட்டத்தை விளக்கும் கருத்தரங்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள தனியார் கூட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் உரிமைகள் திட்டத்தை பல்வேறு அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடையே விளக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் சரளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் த.பிரபுசங்கர் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உரிமை என்பது அடிப்படை. அதனால் தான் இந்த திட்டத்தின் பெயர் “உரிமைகள் திட்டம்” என்றுள்ளது. பொதுவாக உலக வங்கிகள் மூலமாக அமைக்கப்படும் திட்டங்கள் சாலைகள், பெரிய மேம்பாலங்கள் கட்டுவது போன்ற கட்டமைப்புக்கான திட்டமாக இருக்கும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி மூலமாக இந்தியாவிலேயே ஏற்படுத்தக்கூடிய முதல் திட்டம் இந்த திட்டமாகத்தான் இருக்கும்.

அந்த அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு அரசாக இந்த அரசு செயல்படுகிறது. இந்த உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நோக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த உரிமைகள் திட்டத்தை பொருத்தவரை வெறும் மாற்றுத்திறனாளிகள் துறை மட்டும் செயல்படுத்தக்கூடிய திட்டமல்ல.

இது அனைத்து துறைகளும் சேர்ந்து ஒன்றிணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டமாகும்.‌ குறிப்பாக கட்டுமான துறை சார்ந்த துறைகளில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பிற அரசுத்துறைகளைச் சார்ந்த பணியாளர்களும் இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இத்திடத்தை பொறுத்தவரை நமது மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய 3 இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 18 இடங்களில் வட்டார அளவிலான துணை சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிக்கான செய்திகளை ஒரே இடத்தில் வழங்குவதற்காக இந்த சேவை மையங்கள் செயல்படும். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சேவை மையம் ஒன்று இயங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தை மட்டுமல்லாது நமது மாநிலத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அம்சங்களும் நிறைவேற்றும் முதல் மாநிலமாக மாற்றுவதற்கு இந்த உரிமைகள் திட்டத்தை பயன்படுத்தி முன்னேற்ற வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பினர், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் உரிமைகள் திட்டத்தை விளக்கும் கருத்தரங்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...