மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் கடந்த வியாழன் அன்று மாலை காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் சித்தர் பீட வளாகத்தில் உள்ள புற்று மண்டபத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், ஆன்மீக இயக்கத்தினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்காரு அடிகளாரின் துணைவியார் லட்சுமியை பங்காரு அடிகளார் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஆன்மீக இயக்க துணை தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உடன் இருந்தனர். மேலும், ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று பங்காரு அடிகளாரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.
இதனைத்தொடர்ந்து, நிருபர்களிடம் திருமாவளவன் கூறுகையில், ஆன்மீக தளத்தில் சமூக நீதியை நிலைநாட்டிய அடிகளார் மறைவு சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஒரு பேரிழப்பாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை கருவறைக்குள் அனுப்ப முடியும், பூஜை செய்ய முடியும் என சிந்தித்து அதை செயல்படுத்தி காட்டிய மகத்தான சமூக நீதி போராளியாக அடிகளாரை பார்க்கிறோம். மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கின்ற காலத்தில், கோயில் கருவறைக்குள் பெண்கள் எந்த காலத்திலும் பூஜை செய்யலாம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் அடிகளார்’ என்றார்.
அப்போது, விழுப்புரம் எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் பனையூர் பாபு, பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் தமிழினி, பொன்னிவளவன், எழிலரசன், தென்னவன், முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் கார்வேந்தன், புகழேந்தி, பன்னீர்செல்வம், ஒன்றிய பொருளாளர் மதி, தொகுதி துணை அமைப்பாளர் வேலவன், ஒன்றிய குழு உறுப்பினர் சிம்பு, ஊராட்சி மன்ற தலைவர்கள் வினோத், முரளி, ஜீவகன், பொறியாளர் முத்துக்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
The post மறைந்த பங்காரு அடிகளார் குடும்பத்தை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் appeared first on Dinakaran.