×

கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் 5 தூண்கள் சரிந்தது: தெலுங்கானாவில் பரபரப்பு

திருமலை: கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் 5 தூண்கள் திடீரென சரிந்தது. கோதாவரி ஆறு மகாராஷ்டிராவில் உற்பத்தியாகி தெலங்கானா வழியாக பாய்ந்து ஆந்திராவில் கடலில் கலக்கிறது. தெலங்கானாவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மேடிகட்டா என்ற இடத்தில் காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தின் கீழ் ₹80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணை கட்டப்பட்டது. முதல்வர் சந்திரசேசரராவின் கனவு திட்டமாக இந்த அணை கட்டப்பட்டது. ஆற்றின் குறுக்கே 1.6 கி.மீ நீளத்திற்கு 85 மதகுகள் மற்றும் தூண்களுடன் மேம்பாலத்துடன் பிரம்மாண்டமாக இந்த அணை அமைந்துள்ளது.

இந்த அணையின் மூலம் தெலங்கானாவின் 23 மாவட்டங்களில் குடிநீர், பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த அணை கடந்த 2019ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அணையில் 17 முதல் 21 வரை உள்ள தூண்கள் நேற்று முன்தினம் இரவு பலத்த சத்தத்துடன் சரிந்து 4 அடிக்கு கீழே இறங்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக அணைப்பகுதியில் 144 தடையை அமல்படுத்தினர். மேலும் அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதையேற்று தேசிய அணை பாதுகாப்பு ஆணைய அதிகாரி அனில்ஜெயின் தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர்கள் அணைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 20வது தூணில் கேட் உடைந்ததும், இதனால் 17, 18, 19, 21வது தூண்கள் சரிந்து 4அடி கீழே இறங்கியதும் தெரிய வந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் 57 கதவணைகளை திறந்து 45,260 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 12,240 கனஅடியாக உள்ளது.

The post கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் 5 தூண்கள் சரிந்தது: தெலுங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Godavari River ,Telangana ,Maharashtra ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...