×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* உளுந்து வடை தட்டும்போது அரிசி மாவை லேசாகத் தொட்டு தட்டினால் வடை மேலே மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

* அடை செய்யும் போது ஒரு கப் கேரட் துருவலை சேர்த்துக் கொண்டால் அதன் ருசியே தனி.

* தோசை மாவு அளவுக்கு அதிகமாக புளித்துவிட்டால் சிறிது சர்க்கரை கலந்தால் சரியாகிவிடும்.

* கீரை வேகவைத்த தண்ணீரோடு சோறு வடித்த தண்ணீரையும் சிறிது உப்பு, மிளகையும் கலந்து குடிக்க சத்தான சூப் தயார்.

– கே.கவிதா, வேலூர்.

* மதியம் வைத்த கீரை மீதம் இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி அதன் மேல் கார்ன் சிப்ஸ், மிளகுத் தூள் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையான
சூப் ரெடி.

* மதியம் வைத்த பொரியல் மீதி இருந்தால் அதனுடன் பனீர் சேர்த்து இரண்டு பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து சாண்ட்விச் போல தயார் செய்து கொடுக்கலாம்.

* மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து வேகவைத்தால் முள்ளங்கி வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

* சமோசாவிற்கு மாவு பிசையும் போது மைதாவை சலித்து, மெல்லிய துணியில் கட்டி, இட்லி தட்டின் மீது வைத்து, ஐந்து நிமிடம் ஆவிபிடித்து உப்பு, சீரகம், டால்டா போட்டு பிசைந்தால் சமோசா மொறுமொறுவென்று, மிருதுவாக இருக்கும்.

– ஜானகி ரங்கநாதன், சென்னை.

* சப்பாத்திக்கு குருமா செய்யும் போது கேரட், பீட்ரூட்டுடன் பப்பாளிக் காயையும் நறுக்கி போட்டு, பட்டை, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து சேர்த்து குருமா செய்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

* கொத்தமல்லி சட்னி மீந்து போனால் மோரில் சட்னியைப்போட்டு கரைத்து விட்டால் மசாலா மோர் போல சுவையாக இருக்கும்.

* புளியோதரை செய்யும் போது, இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள், கால் தேக்கரண்டி வெந்தயம் இவைகளை வறுத்து, பொடி செய்து போட்டு கலந்து விட்டால் சுவை அதிகமாக இருக்கும்.

– கே.சித்ரா, சென்னை.

* சப்பாத்தி, பூரி இவைகள் செய்வதற்காகப் பிசைந்த மாவு மீந்து போய்விட்டால், மாவில் எண்ணெயோ, நெய்யையோ தடவி, காற்றுபுகாத டப்பாவில் வைத்து மூடி, ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மாவு இறுகாமலும், கெட்டியாகவும் இருக்கும். இரண்டு நாட்கள் கழித்து சப்பாத்தி செய்யலாம்.

* பாலை உரையூற்றிய பின் அந்த பாத்திரத்தை கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது. அசைக்காமல் இருந்தால்தான் கெட்டி தயிர் கிடைக்கும்.

– மஹிதாரா, கோவை.

* பலகாரங்கள் செய்வதற்கான மாவில் சூடான எண்ணெய் கலந்து கொண்டால் எண்ணெய் குடிக்காது, சுவையும் கூடும்.

* கடலை மாவைக் குறைத்து, பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் முறுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

* முறுக்கு மாவில் வேர்க்கடலைப் பொடி கலந்தால் கரகரவென்று ருசியாகவும் இருக்கும்.

* பொட்டுக் கடலை மாவில் இனிப்புகள் செய்தால் சுவையாக இருக்கும். வாயு பிரச்னை ஏற்படாது. நெய்யும், சர்க்கரையும் குறைவாக செலவாகும்.

– எஸ்.ராஜம், திருச்சி.

* ப்ரவுன் கலர் பேப்பரில் செய்யப்பட்ட கவர்களில் வாழைப்பழத்தை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

* இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமல் இருக்க, அதன் மீது சிறிதளவு தேன் பூசி வைத்தால் போதும்.

* இட்லிக்கு மாவு அரைத்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்தால் இட்லி வெண்மையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* அதிரச மாவு மீதமாகி விட்டால் அத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து கரைத்து பணியாரம் செய்தால் சுவையாக இருக்கும்.

– எஸ். ஆஷாதேவி, சென்னை.

* காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு எடுத்தால் கிருமிகள் இறந்து விடும். நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

* கடலை எண்ணெய் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க, சிறிதளவு புளியை போட்டு வைத்தால் போதும்.

* உணவை பொட்டலமாக வாழை இலையில் கட்டும் போது வென்னீரில் நனைத்துவிட்டு கட்ட வேண்டும். கிழியாமல் கட்ட முடியும்.

– ஏ.சித்ரா, காஞ்சிபுரம்.

வாழைப்பூ குருமா

தேவையானவை:
நறுக்கிய வாழைப்பூ,
உருளைக்கிழங்கு,
துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது,
சோம்பு – சிறிதளவு,
மிளகாய் தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வாழைப்பூ, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு ஆகிய மூன்றையும் தனித்தனியே வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு தாளித்து, அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கியவுடன், துவரம் பருப்பை நீருடன் சேர்க்கவும். உருளைக்கிழங்கை மசித்து அதில் கொட்டி, நீர் வடித்த வாழைப்பூவைச் சேர்த்துக் கிளறவும். இது சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள சூப்பர் காம்பினேஷன். உடலுக்கும் சத்து தரும்.

– இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்